"எத்தனை தேர்தல் வந்தாலும் திமுகவே வெல்லும்!" - அமைச்சர் தங்கம் தென்னரசு அதிரடி முழக்கம்..!
தி.மு.க. தென்மண்டல இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு மாநாடு பிரம்மாண்டமாக நடைபெற்றது. துணை முதலமைச்சரும், தி.மு.க. இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கழகத் தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றினார்.
இவ்விழாவில், வரவேற்புரையாற்றிய விருதுநகர் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், அமைச்சருமான தங்கம் தென்னரசு, "தென்பாண்டிக் கடல் திரண்டு வந்து வீரர்களின் பெருங்கூட்டமாக மாறியதைப் போல, இன்றைய இளைஞரணி முன்னெடுப்பு மாபெரும் மாநாடாக அமைந்துள்ளது. நாளைய தமிழகத்தின் நம்பிக்கை நட்சத்திரமாகவும், விடிவெள்ளியாகவும் நமது துணை முதலமைச்சரும், இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் இருக்கிறார். தான் கண்ட களங்கள் அனைத்தையும் வென்றெடுத்து, ஆரிய படை கடந்த பாண்டியன் நெடுஞ்செழியனைப் போல, திராவிட முன்னேற்றக் கழகத்தை வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்லும் மகத்தான தலைவராக நமது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்த மாபெரும் விழாவிற்கு சிறப்புரை வழங்கி பெருமை சேர்த்துள்ளார்.
முதல்வர் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சி வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல் மட்டுமின்றி, எதிர்காலத்தில் எந்தத் தேர்தல் வந்தாலும் திராவிட முன்னேற்றக் கழகமே தமிழ்நாட்டின் ஆட்சிப் பொறுப்பில் அமரும். வரலாற்றினுடைய பாதையில் சந்திப்புகள் பல சரித்திரங்களை உருவாக்கி இருக்கிறது. மனித நாகரிகம் ஆறுகளைச் சந்தித்து ஆற்றங்கரை நாகரிகங்களைப் படைத்தது; ஆறு கடலைச் சந்தித்து துறைமுக நகரங்களையும் வாணிப செழிப்பையும் உருவாக்கியது.
அதேபோல், 20ஆம் நூற்றாண்டில் தந்தை பெரியாரை பேரறிஞர் அண்ணா சந்தித்தது சமுதாய மறுமலர்ச்சியைத் தோற்றுவித்தது. பேரறிஞர் அண்ணா கலைஞர் கருணாநிதியை சந்தித்தது தமிழ்நாட்டில் அரசியல் புரட்சியை விதைத்தது. அதேபோல், இளமைக்காலத்தில் மிசாவில் சிறைத் துன்பங்களைச் சந்தித்த நமது தலைவர், இன்று தமிழ்நாட்டு மக்களின் தலைவனாக தனித்து நிற்கிறார். அந்த வரிசையில் நமது கழக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில், 5 லட்சம் நிர்வாகிகளை ஒருங்கிணைக்கும் மண்டல நிர்வாகிகள் சந்திப்பு தமிழ்நாட்டின் எதிர்காலத்தின் தலையெழுத்தை மாற்றும் வரலாற்று நிகழ்வுகளாக அமையும். இந்நிகழ்வை நடத்த வாய்ப்பளித்த கழகத் தலைவருக்கும், இளைஞரணி செயலாளருக்கும் மனமார்ந்த நன்றி" என்று பேசினார்.


