எந்த மாநிலத்தின் மீதும் எந்த மொழியையும் திணிக்கவில்லை - பிரகாஷ் ஜவடேகர் விளக்கம்..!

 
1

புதிய கல்விக்கொள்கை குறித்து கடுமையாக விமர்சனம் செய்த காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான ப. சிதம்பரம், மத்திய அரசு ஆணவத்தின் உச்சத்தில் இருப்பதாகச் சாடியிருந்தார். இதற்கு பாஜக மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான பிரகாஷ் ஜவடேகர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஜவடேகர், "சிதம்பரம் அவர்களே, மக்களை முட்டாள் ஆக்காதீர்கள். தேசிய கல்விக் கொள்கை 2020 எந்த மாநிலத்தின் மீதும் எந்த மொழியையும் திணிக்கவில்லை. இது மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் மாணவர்களுக்கு வாய்ப்புகளை வழங்குகிறது. 3 மொழிகளில் குறைந்தது 2 மொழிகள் இந்திய மொழியாக இருக்க வேண்டும் என்றுதான் நிபந்தனை விதிக்கிறது" எனக் கூறியுள்ளார்.


தேசிய கல்விக் கொள்கைக்கு (NEP) இணங்காவிட்டால் தமிழ்நாட்டுக்கு நிதி விடுவிக்க முடியாது என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியதற்கு ப. சிதம்பரம் கண்டனம் தெரிவித்திருந்தார். அமைச்சரின் கூற்று "ஆணவத்தின் உச்சம்" எனச் சாடிய சிதம்பரம், "மொழிக் கொள்கையை வகுப்பது மாநில மக்களுக்கும் மாநில அரசுக்கும் உள்ள உரிமை. தமிழக மக்கள் ஒற்றுமையாக நின்று இந்த ஆணவப் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்" என்றார்.

மேலும், அமைச்சரின் ஆணவப் பேச்சிலிருந்து அவருக்கு தமிழ்நாட்டின் வரலாறு, தமிழக மக்களின் உணர்வுகள் அல்லது இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்ட வரலாறு எதுவும் தெரியாது என்பது தெளிவாகிறது என்றும் அவர் கூறினார்.