ஏடிஜிபியின் அறை தீக்கிரையான விவகாரத்தில் சதிதிட்டம் ஏதும் இல்லை- டிஜிபி விளக்கம்

ஏடிஜிபி கல்பனா நாயக்கின் அறை தீக்கிரையான விவகாரத்தில் சதிதிட்டம் ஏதும் இல்லை, அறையில் வேண்டுமென்றே தீ வைப்பு செயல் எதுவும் நடைபெறவில்லை என டிஜிபி சங்கர் ஜிவால் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழ்நாட்டில் காவல்துறை உதவியாளர்களை தேர்வு செய்வதில் நடந்த முறைகேடுகளை அம்பலப்படுத்தியதற்காக தமது அலுவலகத்தில் தீ விபத்தை ஏற்படுத்தி தம்மை படுகொலை செய்ய சதி நடந்ததாக தமிழக காவல்துறையின் கூடுதல் தலைமை இயக்குனரும், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினர் செயலாளராக பணியாற்றியவருமான கல்பனா நாயக் குற்றஞ்சாட்டியிருந்தார்.
இவ்விவகாரம் பூதாகரமாகியிருந்த நிலையில் தன்னை கொலை செய்ய சதி என ஏடிஜிபி கல்பனா நாயக் அளித்த புகார் குறித்து விளக்கம் அளித்துள்ள டிஜிபி சங்கர் ஜிவால், “ஏடிஜிபி கல்பனா நாயக் அறையில் ஏற்பட்ட தீ விபத்து திட்டமிடப்பட்ட செயல் இல்லை, சதிதிட்டம் ஏதும் இல்லை. அலுவலகத்தில் தீ விபத்து நடந்தவுடன் டிஜிபி அலுவலகத்தில் ஏடிஜிபி கல்பனா நாயக் புகார் அளித்தார். அறையில் வேண்டுமென்றே தீ வைப்பு செயல் எதுவும் நடைபெறவில்லை, மின்வயரில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாகத்தான் தீவிபத்து நடந்துள்ளது தீ விபத்து குறித்து எழும்பூர் போலீசாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. தடயவியல் நிபுணர்கள், தீயணைப்புத்துறை, மின் துறை ஆகியோரிடம் தீ விபத்து தொடர்பாக விளக்கம் பெற்றுள்ளோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.