பள்ளி திறக்கும் தேதியில் எந்த மாற்றமும் இல்லை - அமைச்சர் அன்பில் மகேஷ்..

பள்ளிகள் திறக்கப்படும் தேதியில் எந்த மாற்றமும் இல்லை, திட்டமிட்டபடி 6 முதல் 12ம் வகுப்புகளுக்கு ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
தமிழக முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு ஏப்ரல் 29ம் தேதி முதல் கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. விடுமுறை முடிந்து இன்னும் ஒரு வாரத்தில் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. முன்னதாக அறிவிக்கப்பட்ட படி, 6 முதல் 12ம் வகுப்புகளுக்கு ஜூன் 1ம் தேதியும், 1 முதல் 5ம் வகுப்புகளுக்கு ஜூன் 5 ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படுமென அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பள்ளி திறப்பை தள்ளி வைக்க வேண்டும் என கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து அமைச்சர் அன்பில் மகேஷிடம் மீண்டும் கேட்கப்பட்டபோது, அதற்கு விளக்கமளித்த அமைச்சர் , பள்ளிகள் திறக்கப்படும் தேதியில் எந்த மாற்றமும் இல்லை; திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும் என்று தெரிவித்தார். 6 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 1-ஆம் தேதியும், 1 முதல் 5ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஜூன் 5-ம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும். மேலும் பள்ளிகள் திறப்பதில் மாற்றம் இருந்தால் முதலமைச்சர் அறிவிப்பார் என்றும் கூறினார்.