ஜல்லிக்கட்டு நடத்த தடையில்லை - உச்ச நீதிமன்றம்

 
jalli

ஜல்லிக்கட்டு தொடர்பான தமிழ்நாடு அரசின் சட்டம் செல்லும் என்று  உச்சநீதிமன்ற தீர்ப்பளித்துள்ளது.

jallikattu

கடந்த 2014 ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.  இதைத் தொடர்ந்து தமிழகத்தில் மிகப்பெரிய அளவில் ஜல்லிக்கட்டு போராட்டம் நடத்தப்பட்டது. இதையடுத்து 2017 ஆம் ஆண்டு மிருகவதை தடுப்புச் சட்டத்தில் தமிழ்நாடு அரசு திருத்தம் செய்து குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்ற பிறகு ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி வழங்கப்பட்டது.  இதன் எதிரொலியாக கால்நடைகளை வைத்து நடத்தப்படும் போட்டிகளுக்கு அனுமதி வழங்கும் சட்டத்தை  சில மாநில அரசுகளும் இயற்றின. இச்சட்டங்களை எதிர்த்து பீட்டா அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை நீதிபதி கே .எம் .ஜோசப் தலைமையிலாயின ஐந்து பேர் கொண்ட நீதிபதிகள்  அமர்வு விசாரித்து வந்தது. இவ்வழக்கு விசாரணையில் ஜல்லிக்கட்டு காளைகள் துன்புறுத்தப்படுவதில்லை எனவும் அனைத்து விதிமுறைகளும்,  சரியாக நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் தமிழக அரசு தரப்பில் வாதிட்ட நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் 8ம் தேதி வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உச்சநீதிமன்றம் ஒத்தி  வைத்தது. இந்த சூழலில் உச்ச நீதிமன்ற நீதிபதி கே.எம். ஜோசப் அடுத்த மாதம் ஓய்வு பெறும் நிலையில் ஜல்லிக்கட்டு வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

supreme court

இந்நிலையில் ஜல்லிக்கட்டு போட்டியை அனுமதிக்கும் தமிழ்நாடு அரசின் சிறப்பு சட்டங்கள் செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஜல்லிக்கட்டு தொடர்பான தமிழ்நாடு அரசின் சட்டம் திருப்தி அளிக்கிறது என்றும் ஜல்லிக்கட்டு, தமிழ்நாட்டின் கலாச்சாரத்தோடு ஒருங்கிணைந்த பகுதி என தமிழ்நாடு அரசு கொண்டு வந்த சட்ட திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது என்று 5 நீதிபதிகள் கொண்ட  உச்சநீதிமன்ற அமர்வு அரசியல் சாசனம் தீர்ப்பளித்துள்ளது.