ஆன்லைன் ரம்மி நிறுவனம் மீது மார்ச் 28 வரை எந்த நடவடிக்கையும் கூடாது- சிபிசிஐடிக்கு ஐகோர்ட் உத்தரவு

 
Madras Court

ஆன்லைன் ரம்மியில் ஏற்பட்ட தோல்வியால் இருவர் தற்கொலை தொடர்பான விசாரணைக்கு அனுப்பப்பட்ட நோட்டீசை எதிர்த்து ஆன்லைன் ரம்மி நிறுவனம் தொடர்ந்த வழக்கில், பதில்மனு தாக்கல் செய்யும் வரை எவ்வித கடுமையான நடவடிக்கையும் எடுக்க வேண்டாம்  என சிபிசிஐடி  போலீசாருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

Madras High Court raps Election Commission of India, refuses to gag media  on oral observations | Cities News,The Indian Express

ஆன்லைன் ரம்மி விளையாட்டில் இழப்பு ஏற்பட்டதால், சென்னை பெருங்குடியில் வசித்துவந்த லண்டனை சேர்ந்த தனியார் வங்கியின் ஊழியரான மணிகண்டன் என்பவர் தனது மனைவி தாரகபிரியா, 11 வயது மகன் தாரன், ஒன்றரை வயது தாகன் ஆகியோரை கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்துகொண்டார். இதேபோல சென்னை அண்ணா நகரை சேர்ந்த ரகுவரனும் தற்கொலை செய்து கொண்டார்.

இந்த இரு வழக்குகளையும் சிபிசிஐடி  போலீசார் விசாரித்து வருகின்றனர்..  விசாரணையில் மும்பையை சேர்ந்த கேம்ஸ் 24*7 என்கிற நிறுவனத்திடம் விளையாட்டு தொடர்பான விவரங்கள், விளையாட்டு மூலம் வழங்கப்பட்ட போனஸ், சம்பாதித்த தொகை , வருமான வரி பிடித்தம் தொடர்பான விவரங்கள் ஆகியவற்றை வழங்கும் படி  சிபிசிஐடி கடந்த மாதம் 24ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பியது. இந்த இரண்டு நோட்டீஸ்களும் ரத்து செய்ய கோரி கேம்ஸ் 24*7 நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கு நீதிபதி ஜி.சந்திரசேகரன் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜ்குமார், நான்கு வழக்குகள் தொடர்ப்பட்டுள்ளன என்றும், ஏராளமான ஆவணங்கள் உள்ளதால் விரிவான பதில்மனு தாக்கல் செய்ய இரண்டு வாரங்கள் அவகாசம் வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். பதில் மனு தாக்கல் செய்வதற்கு அவகாசம் வழங்குவதில் ஆட்சேபம் இல்லை என தெரிவித்த மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், அதுவரை விசாரணை என்ற பெயரில் துன்புறுத்துவது போன்ற கடுமையான நடவடிக்கைகள் எடுக்க கூடாது என காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரினார்.

இதையடுத்து அரசு தரப்பு பதிலளிக்க மார்ச் 28ஆம் தேதி வரை அவகாசம் வழங்கிய நீதிபதி, அதுவரை எந்த கடுமையான நடவடிக்கையும் எடுக்க கூடாது என்று உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தார்.