“வெறும் அறிவிப்பு மட்டும்தான்; எதையும் செயல்படுத்தல.. இன்னும் 2 நாட்களில் தெரியும்”- நிர்மல் குமார்
மின்வாரிய அதிகாரிகள் கூட்டம் இதுவரை நடைபெறவில்லை, இதே அதிகாரிகளை வைத்துத்தான் நாங்கள் தடையில்லா மின்சாரம் வழங்கினோம் என முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.
சட்டமன்றத்தில் உரையாற்றிய முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, “அரசு பொறுப்பேற்ற பிறகு உயர் அதிகாரிகளை அழைத்து ஆய்வுக்கூட்டங்களை நடத்தி என்னென்ன குறைபாடுகள் இருக்கிறது என்று ஆலோசித்து முடிவெடுக்க வேண்டியது அரசின் கடமை. ஆனால், மின்வாரிய உயர் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் இதுவரை நடைபெறவில்லை. உடனடியாக ஆய்வுக்கூட்டங்களை நடத்தி மின்வெட்டு சிக்கலை சரி செய்ய வேண்டும், இப்போதுள்ள அதிகாரிகளை வைத்துதான் திமுக ஆட்சியிலும் தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டது” என்றார்.
மின்வெட்டு தொடர்பான செந்தில் பாலாஜி பேச்சுக்கு பதில் கொடுத்த அமைச்சர் நிர்மல் குமார், “தமிழ்நாட்டில் எதனால் மின்வெட்டு வருகிறது என தொடர்ந்து சொல்லி வருகிறோம். அடிப்படை கட்டமைப்புகளை கடந்த 5 ஆண்டுகளில் மின்சார துறையில் செய்யவில்லை. மின்சாரம் எதனால் தட்டுப்பாடு வந்தது, எங்கெல்லாம் Fuse கேரியர் எடுத்து சென்றார்கள் என்ற விளக்கத்தை சொல்லி உள்ளோம். மின் துறை தொடர்பாக ஒரு சில நாட்களில் வெள்ளை அறிக்கை வெளியிடப்பட உள்ளது, கடந்த ஆட்சியில் அறிவிப்பு மட்டும்தான் செய்திருக்கிறார்கள். எதையும் செயல்படுத்தவில்லை.. 2 நாட்களில் வெள்ளை அறிக்கை வெளியிடுவோம். வெள்ளை அறிக்கை வெளியானதும் தெரியும் உங்க ஆட்சியில என்ன பண்ணீங்கனு. 90,000 மின்மாற்றிகள் வாங்கியதாக செந்தில் பாலாஜி கூறுகிறார். அதில் 44000 மின்மாற்றிகள் வாங்கியதில் சிபிஐ வழக்கு உள்ளது” என்றார்.

