பா.ஜ.க.வில் நிலவும் ஆடியோ கலாசாரம் தவறான அணுகுமுறை - நிர்மல் குமார் பேச்சு

 
nirmal

பா.ஜ.க.வில் நிலவும் ஆடியோ கலாசாரம் தவறான அணுகுமுறை என, பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த நிர்மல் குமார் கூறியுள்ளார். 

தமிழக பாஜகவின் தொழில்நுட்ப பிரிவு தலைவராக இருந்தவர் நிர்மல் குமார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாஜகவில் இருந்து விலகி, அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். அவரை தொடர்ந்து இன்னும் சிலர் பாஜகவில் இருந்து விலகி நிர்மல் குமார் தலைமையில் அதிமுகவில் இணைந்தனர். இதனால் அதிமுக-பாஜக இடையே உரசல் போக்கு ஏற்பட்டது. எடப்பாடி பழனிசாமியின் புகைப்படத்தை பாஜகவினர் எரித்த நிலையில், அண்ணாமலையின் புகைப்படத்தை அதிமுகவினர் எரித்தனர். 

இந்நிலையில், அதிமுகவில் இணைந்த நிர்மல் குமார் பாஜகவில் இருந்து வெளியேறியது குறித்து தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசியதாவது: பா.ஜ.க.வில் இருந்து வெளியறியது, நான் நன்கு சிந்தித்து எடுத்த தன்னிச்சையான முடிவு. எடப்பாடி பழனிசாமி சொல்லித்தான் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மீது குற்றஞ்சாட்டுவதாக கூறுவது தவறு. நான் ராஜினாமா செய்த பிறகுதான் எடப்பாடி பழனிசாமியை சந்திக்கவே நேரம் கேட்டேன். பா.ஜ.க.வில் நிலவும் ஆடியோ கலாசாரம் தவறான அணுகுமுறை. இதுபற்றி நான் கட்சியில் இருந்த போது நடந்த பல்வேறு கூட்டங்களில் எதிர்ப்பு தெரிவித்து பேசியிருக்கிறேன். பா.ஜ.க., அ.தி.மு.க.வை ஆட்டுவிப்பதாக கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. எடப்பாடி பழனிசாமியை தலைவராக ஏற்றுக்கொண்டு அ.தி.மு.க.வில் இணைந்து இருக்கிறேன். இவ்வாறு கூரினார்.