நிபா வைரஸ் எதிரொலி- தமிழக, கேரள எல்லைகளில் அலர்ட்
கேரளா நிஃபா வைரஸ் எதிரொலியாக கோவை - கேரளா எல்லையில் உள்ள வாளையாறு உள்ளிட்ட 6 சோதனைச் சாவடிகளில் மாவட்ட சுகாதாரத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

கேரளா மாநிலத்தில் இதுவரை 2 பேர் நிஃபா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். கடந்த சனிக்கிழமை பாலக்காட்டு மாவட்டத்தில் நிஃபா வைரஸ் பாதிப்பால் ஒருவர் உயிரிழந்த நிலையில், தமிழக எல்லையோர மாவட்டங்களில் கண்காணிப்பை தீவிரபடுத்த தமிழ்நாடு சுகாதாரத்துறை உத்தரவிட்டது. அதன் அடிப்படை கோவை - கேரளா எல்லையான வாளையாறு, மீனாட்சிபுரம், கோபாலபுரம், ஆனைக்கட்டி, வீரப்பகவுண்டனூர், பட்டசாலை ஆகிய 6 சோதனைச் சாவடிகளில் மாவட்ட சுகாதாரத்துறையினர் கண்காணிப்பை தீவிரபடுத்தியுள்ளனர்.
குறிப்பாக வட்டார மருத்துவ அலுவலர், சுகாதார ஆய்வாளர், உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் கேரளாவில் இருந்து கோவை வருவோருக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் காய்ச்சல் பரிசோதனை செய்கின்றனர். மேலும் உடல் வலி உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் முகவரி, விபரங்கள் சேகரிக்கப்படுகிறது. மேலும் கோவை வரும் பேருந்து பயணிகளிடமும் தெர்மல் ஸ்கேன் கருவி மூலம் காய்ச்சல் பரிசோதனை செய்யப்படுகிறது. அதே போல நிஃபா பாதிப்பு கண்டறியப்பட்ட மலப்புரம், பாலக்காடு மாவட்டங்களில் இருந்து வருவோர் விபரங்கள் தனியாக சேகரிக்கப்படுகிறது. மறு அறிவிப்பு வரும் வரை இந்த சோதனைகள் தொடரும் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


