நிபா வைரஸ்- புதுச்சேரியில் நாளை முதல் முகக்கவசம் கட்டாயம்

 
mask

கேரளாவில் நிபா வைரஸ் பரவல் எதிரொலி காரணமாக, புதுச்சேரி பிராந்தியம் மாகேயில் கட்டுபாடுகள் அமலுக்கு வந்தது. பொதுமக்கள் கூடும் இடங்கள் மற்றும் நெரிசலான பகுதியில் இருந்து விலகி இருக்க வேண்டும் என்று மண்டல நிர்வாக அதிகாரி சிவராஜ் மீனா உத்தரவு பிறப்பித்தார்.

puducherry

மாஹே பிராந்திய மண்டல நிர்வாக அதிகாரி சிவராஜ் மீனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கோழிக்கோடு மாவட்டத்தில் சமீபத்தில் நிபா வைரஸ் பரவியதில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து கோழிக்கோடு மாவட்ட ஆட்சியர் பாதிக்கப்பட்ட பகுதிகளை கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவித்துள்ளார்.பாதிக்கப்பட்ட பகுதிகள் புதுச்சேரியின் மாஹே பகுதிக்குமிக அருகில் உள்ளது. 

எனவே, நிபா வைரஸ் பரவுவதை தடுக்க மாஹேயில் பொதுமக்கள் கூடும் இடங்கள் மற்றும் நெரிசலான பகுதியில் இருந்து விலகி இருக்க வேண்டும். விழாக்கள், கூட்டங்களை ஒத்தி வைக்கலாம். அல்லது தேவையான நெறிமுறைகள் கண்டிப்பாக பின்பற்றப்படும். தேவையற்ற பயணங்களை தவிர்க்கவும். கடற்கரை, பூங்கா, மால் போன்ற இடங்களுக்குச் செல்வதை அதிகபட்சம் தவிர்க்க வேண்டும். பொது இடங்கள் மற்றும் வழிப்பாட்டு தலங்களுக்கு செல்லும் மக்கள் முகக்கவசம் அணிய வேண்டும்‌. சானிடைசர் கொண்டு கைகளை சுத்தம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.