நீலகிரி: 3 நாட்கள் ஆகிடுச்சு.. நீரில் அடித்துச் செல்லப்பட்ட மாணவனை தேடும் பணி தீவிரம்..

 
நீலகிரி: 3 நாட்கள் ஆகிடுச்சு.. நீரில் அடித்துச் செல்லப்பட்ட மாணவனை தேடும் பணி தீவிரம்.. 

நீலகிரியில் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட மாணவனை தேடும் பணி  மூன்றாவது நாளாக தொடர்கிறது.   ஸ்கூபா டைவிங் உபகரணங்களைக் கொண்டு  தேசிய பேரிடர் மீட்பு .படையினர் உதவியுடன்  தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் பந்தலூரை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த 9 நாட்களாக அதிகனமழை பெய்து வருகிறது. தொடர்ச்சியாக ஆறுகள் முழுவதும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது.  இந்த நிலையில் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஆற்றின் கரையோரம் மீன் பிடிக்கவோ மற்றும் வேறு எந்த பணிகளுக்கும் செல்ல வேண்டாம் என தொடர்ந்து வருவாய்த்துறையினர் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். 

அதையும் பொருட்படுத்தாமல் பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட பிதர்காடு அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் நான்கு மாணவர்கள் தமிழக - கேரள எல்லையில் ஓடும் வெள்ளேரி ஆற்றிற்கு மீன் பிடிக்க சென்றுள்ளனர். அப்பொழுது தண்ணீர் வரத்து அதிகமாக இருந்ததால்,  பிதர்காடு பகுதியை  சேர்ந்த குணசேகரன் வயது 18, கவியரசன் வயது 17 இருவரும்  வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டனர். 

ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட மாணவரை மீட்கும் பணி

இதனைத் தொடர்ந்து உடனடியாக அங்கு சென்ற காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் ஆற்றில் அடித்து செல்லப்பட்டு இறந்த நிலையில் மரங்களின் வேரில் சிக்கி இருந்த குணசேகரனின் உடலை மீட்டனர். மேலும் அடித்து செல்லப்பட்ட கவியரசனின் நிலை தெரியாத நிலையில் தொடர்ந்து தீயணைப்புத் துறையினர் மற்றும் மீட்பு குழுவினர் தேடி வந்தனர்.  அதேநேரம் தண்ணீரின் வேகம் அதிகமாக இருந்ததால், சிறுவன் ஒருவேளை கேரளாவிற்கு அடித்து சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் கேரளா காவல்துறையினரும் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதில் குணசேகரன் நேற்று சடலமாக மீட்கப்பட்டார்.  இதனைத் தொடர்ந்து மூன்றாவது நாளான இன்று மாயமான கவியரசனை தேடும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னை அரக்கோணத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட  30க்கும் மேற்பட்ட தேசிய பேரிடர் மீட்பு படையினர்,  பட்டவயல் பகுதியில் உள்ள வெள்ளேரி ஆற்றில் தேடும் பணியில் களமிறங்கி உள்ளனர்.  குறிப்பாக தண்ணீருக்கு  அடியில் சென்று தேடும் வகையில்  கவச உடை அணிந்து ஸ்கூபாடைவிங் உபகரணங்களுடன் திவீரமாக தேடி வருகின்றனர்.