“அடுத்த ஆண்டு 100% தேர்ச்சியை நோக்கி நகர்வோம்..” - முதல்வர் ரங்கசாமி.

 
rangasamy


“இந்தாண்டு தேர்ச்சி சதவீதம் குறைந்துள்ளது; அடுத்த ஆண்டு 100% தேர்ச்சியை நோக்கி நகர்வோம்..” என புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.  

தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் இன்று 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.  இதில் புதுச்சேரி, காரைக்காலில் 89.12 சதவீத  மாணவ, மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர். இது கடந்தாண்டை விட 3.8 சதவீதம் குறைவு ஆகும். புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில்  தேர்வு முடிவுகளை வெளியிட்டுப் பேசிய அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி, “10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் புதுச்சேரி, காரைக்காலை சேர்ந்த 7 ஆயிரத்து 797 மாணவர்களும், 7 ஆயிரத்து 618 மாணவிகள் என மொத்தம் 15 ஆயிரத்து 415 மாணவர்கள் தேர்வு எழுதினர். இதில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படித்த 13 ஆயிரத்து 738 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இதில் 6 ஆயிரத்து 700 மாணவர்களும், 7 ஆயிரத்து 38 மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர். புதுச்சேரி, காரைக்காலில் அனைத்து அரசு, தனியார் பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் 89.12 சதவீதம். புதுச்சேரி, காரைக்காலில் அரசு பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் 78.92 ஆகும். கடந்த ஆண்டு அரசு, தனியார் பள்ளிகளில் 92.92 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருந்தனர்.

10ம் வகுப்பு பொதுத்தேர்வு  முடிவு

அரசு பள்ளிகளில் மட்டும் 85.01 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருந்தனர். கடந்த ஆண்டோடு ஒப் பிடுகையில் அரசு, தனியார் பள்ளி மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் 3.8 சதவீதமும், அரசு பள்ளிகளில் மட்டும் 6.09 சதவீதமும் குறைந்துள்ளது. புதுச்சேரி, காரைக்காலில் மொத்தம் 287 அரசு மற்றும் தனியார் பள்ளிகள் உள்ளன. இதில் புதுச்சேரியில் 84, காரைக்காலில் 7 என மொத்தம் 91 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.

புதுச்சேரி, காரைக்காலில் உள்ள அரசு பள்ளிகளின் எண்ணிக்கை 107. இதில் புதுச்சேரியில் 7 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. புதுச்சேரி, காரைக்காலில் அரசு, தனியார் பள்ளிகளில் கணிதத்தில் 61, அறிவியலில் 49, சமூகஅறிவியலில் 19 பேர் என மொத்தம் 129 மாணவர்கள் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இந்தாண்டு தேர்ச்சி சதவீதம் குறைந்துள்ளது;  அடுத்தாண்டு 100 சத தேர்ச்சி எடுக்கும் வகையில் செயல்பாடு இருக்கும்” என்று தெரிவித்தார்.  புதுச்சேரி அரசு பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் குறைந்தது குறித்து ஆராய குழு அமைத்து ஆராயப்படும் என  அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்திருக்கிறார்.