டாஸ்மாக் வழக்கில் அடுத்த ட்விஸ்ட் - புதிய நீதிபதிகள் தமிழக அரசிடம் பரபரப்பு கேள்வி

 
ச்

டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையை சட்ட விரோதமானது என அறிவிக்க கோரி தமிழக அரசு தாக்கல் செய்த வழக்கில் அமலாக்கத்துறை பதில் மனுவுக்கு பதில் அளிக்க அரசுக்கு அவகாசம் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த மார்ச் 6ம் தேதி முதல் 8ம் தேதி வரை சோதனை நடத்திய அமலாக்கத்துறை, மதுபானங்கள் கொள்முதல், பார் உரிமங்கள் வழங்கியது, மதுபானங்கள் போக்குவரத்து உரிமங்கள் வழங்கியது உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடுகள் நடந்துள்ளதாக அறிக்கை வெளியிட்டது. இதையடுத்து, அமலாக்க துறையின் சோதனையையும், பறிமுதலையும் சட்டவிரோதமானது என அறிவிக்க கோரி, விசாரணை என்ற பெயரில் டாஸ்மாக் அதிகாரிகளை துன்புறுத்த தடை கோரியும் தமிழக அரசு தரப்பிலும், டாஸ்மாக் நிர்வாகம் தரப்பிலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் எம் எஸ் ரமேஷ் மற்றும் என் செந்தில்குமார் அடங்கிய அமர்வு விசாரணையில் இருந்து விலகுவதாக அறிவித்தது. 

அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு நீதிபதிகள் எஸ் எம் சுப்பிரமணியம் மற்றும் கே. ராஜசேகர் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், 60 மணி நேரம் சோதனை நடத்தி பெண் அதிகாரிகளை நள்ளிரவு வரை சிறை பிடித்துள்ளனர். மனித உரிமை மீறல் இது. அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ள பதில்  மனுவுக்கு பதில் அளிக்க அவகாசம் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், தமிழக காவல்துறை சோதனை நடத்தியது இல்லையா என கேள்வி எழுப்பினர். அதற்கு நள்ளிரவில் சோதனை நடத்தியதில்லை என தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பதில் அளித்தார். மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், தமிழக அரசின் மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என தெரிவித்தார். 

இதைத் தொடர்ந்து தமிழக அரசின் கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள், அமலாக்கத்துறை பதில் மனுவுக்கு பதில் அளிக்க தமிழக அரசுக்கு அனுமதி அளித்து, வழக்கு விசாரணையை ஏப்ரல் 8ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.