பைக் மீது அரசு பேருந்து மோதி புதுமண தம்பதி பலி! திருமணமான 2 மாதங்களில் நடந்த சோகம்
சிதம்பரம் அருகே பைக் மீது அரசு பஸ் மோதி விபத்துக்குள்ளானதில் திருமணமான 2 மாத புதுமண தம்பதி பலியாகினர்.
சிதம்பரம் அருகே உள்ள ஜெயங்கொண்ட பட்டினம் கிராமத்தைச் சேர்ந்தவர் இளவரசி (28). இவர் சிதம்பரம் அருகே உள்ள குமராட்சி காவல் நிலையத்தில் பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். இவருக்கும் அதே ஜெயங்கொண்டபட்டினம் கிராமத்தைச் சேர்ந்த கலைவேந்தன்(30) என்பவருக்கும் கடந்த நவம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது. கலைவேந்தன் ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். இவர்கள் இருவரும் சிதம்பரம் நகரில் உள்ள போலீஸ் குடியிருப்பில் வசித்து வந்தனர். இந்நிலையில் சப்-இன்ஸ்பெக்டர் இளவரசி தனது கணவர் கலைவேந்தனுடன் இன்று சிதம்பரம் அருகே வீரன்கோயில்திட்டு கிராமத்தில் நடந்த ஒரு சுப நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்றார்.
கணவர் பைக்கை ஓட்ட சப் இன்ஸ்பெக்டர் இளவரசி பின்னால் அமர்ந்து சென்றார். சித்தலப்பாடி கிராமத்தின் அருகே சென்றபோது எதிரே கொடியம்பாளையம் கிராமத்தில் இருந்து சிதம்பரம் நோக்கி வந்த அரசு டவுன் பஸ் ஒன்று திடீரென கண்ணிமைக்கும் நேரத்தில் பைக் மீது மோதியது. மோதிய வேகத்தில் பைக் சுமார் 100 மீட்டர் தூரத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டது. இதில் இடிபாடுகளில் சிக்கிய பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரும் அவரது கணவரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த அண்ணாமலைநகர் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் பேருந்துக்கு அடியில் இடுபாடுகளில் சிக்கி இருந்த இருவரின் உடல்களையும் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து சம்பவம் குறித்து அண்ணாமலைநகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.