பள்ளி மாணவர்களின் சத்துணவு திட்டத்தில் புதிய வகை உணவுகள்- முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு
அரசு பள்ளியில் மதிய உணவு திட்டத்தில் புதிய உணவுகளை சேர்க்க முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழக முதல்வராக பொறுப்பேற்றது முதல், முதல்வர் விஜய் பல்வேறு துறையினருடன் ஆலோசனை நடத்தி வருகிறார். அந்த வகையில் தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடனான ஆலோசனையின் போது அரசு பள்ளிகளில் வழங்கப்படும் சத்துணவு திட்டம் குறித்தும் அவர் பேசியிருக்கிறார். அப்போது அவர் சத்துணவுத் திட்டத்தில் என்னென்ன உணவுகள் வழங்கப்படுகின்றன என்பதை கேட்டறிந்தார். அதற்கு அதிகாரிகள் மதிய உணவிற்கு வெஜிடபிள் பிரியாணி, சாம்பார் சாதம், கருப்பு கொண்டை கடலை குழம்பு, தக்காளி சாதம், புளி சாதம், எலுமிச்சை சாதம், கருவேப்பிலை சாதம், கீரை சாதம் உள்ளிட்டவை வழங்கப்படுவதாக சொல்லப்பட்டது.
இந்த திட்டத்தின் கீழ் 40 லட்சம் மாணவர்கள் பயனடைகிறார்கள். அது போல் முதல்வராக இருந்த ஸ்டாலினால் கொண்டு வரப்பட்ட காலை உணவு திட்டத்தின் கீழ் உப்புமா, கிச்சடி, பொங்கல் உள்ளிட்டவை தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டம் வரும் செப்டம்பர் மாதம் முதல் 8ம் வகுப்பு வரை விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதில் மாணவர்களுக்கு தரமான உணவுகள் வழங்க வேண்டும். மாணவர்களுக்கு வீட்டு உணவு போல் சுத்தமாக சமைத்து தர வேண்டும். கூடவே ஊட்டச்சத்தும் இருக்க வேண்டும். உணவு பட்டியலில் மாற்றம் செய்ய வேண்டும் என முதல்வர் விஜய் அறிவுறுத்தியுள்ளார். எப்போதும் ஒரே உணவை வழங்காமல் தற்போது வழங்குவதற்கு பதில் வேறு உணவுகளை வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதிகாரிகள் இது குறித்து உணவு பட்டியலை தயாரித்து அதை முதல்வரிடம் சமர்ப்பித்து அவரது ஒப்புதலுடன் புதிய உணவு பட்டியல் அறிவிக்கப்படும் என தெரிகிறது.

