நவம்பர் 2 முதல் வரப்போகும் புதிய ரூல்ஸ்! – சொத்துப் பத்திரம் வச்சிருக்கவங்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு!
தமிழ்நாடு பதிவுத் துறையில் தொழில்நுட்ப அடிப்படையிலான சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக, குடும்ப ஏற்பாடுகள் தொடர்பான குறிப்பிட்ட ஆவணங்களுக்குக் காகிதமற்ற பதிவு முறையை அறிமுகப்படுத்த தமிழக அரசு நிர்வாக அனுமதி வழங்கியுள்ளது.
இது தொடர்பாக வணிக வரிகள் மற்றும் பதிவுத்துறை சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, "குடும்ப ஏற்பாடுகள் தொடர்பான செட்டில்மென்ட் பத்திரம், விடுவிப்பு பத்திரம், பாகப்பிரிவினை பத்திரம் மற்றும் செட்டில்மென்ட் பத்திரத்தை ரத்து செய்யும் பத்திரம் ஆகிய 4 வகையான ஆவணங்கள் 02.11.2026 முதல் காகிதமற்ற பதிவு முறையில் பதிவு செய்வது கட்டாயமாக்கப்படுகிறது.
இந்த முறையில், பதிவு செய்ய வேண்டிய ஆவணத்தை இணையவழியில் உருவாக்கி, அதனுடன் தேவையான ஆதார ஆவணங்களையும் குறிப்பிட்ட இணையவழி பதிவு தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். பின்னர், பதிவுத்துறை அந்த ஆவணத்தை மின்னணு முறையில் பரிசீலித்து பதிவு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.
எனினும், காகிதமற்ற பதிவு முறை என்பதால் சார் பதிவாளர் அலுவலகத்திற்கு நேரில் செல்ல வேண்டிய அவசியம் முழுமையாக நீங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆவணத்தில் இடம் பெறும் தரப்பினர்கள், அடையாளம் மற்றும் ஆதார் அங்கீகாரத்திற்காக சம்பந்தப்பட்ட சார் பதிவாளர் முன்னிலையில் நேரில் ஆஜராக வேண்டும். பதிவு தொடர்பான தேவையான நடைமுறைகளும் அங்கு மேற்கொள்ளப்படும். பதிவு நடவடிக்கைகள் நிறைவடைந்த பிறகு, பதிவு செய்யப்பட்ட ஆவணத்தின் டிஜிட்டல் நகல் சம்பந்தப்பட்ட நபரின் இணையவழி கணக்கிற்கு அனுப்பப்படும். மேலும், அந்த ஆவணம் டிஜிட்டல் முறையில் பாதுகாக்கப்படும்.
இதன் மூலம் பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை அடுத்தடுத்த கட்டங்களில் காகித வடிவில் கையாளுதல், எடுத்துச் செல்லுதல், ஸ்கேன் செய்தல் மற்றும் பாதுகாத்தல் போன்ற பணிகள் பெருமளவில் குறையும்.
பதிவு ஆவணங்களை மீண்டும் மீண்டும் கையாளுதல், அலுவலகங்களுக்கு இடையே எடுத்துச் செல்லுதல், ஸ்கேன் செய்தல் மற்றும் காகித ஆவணங்களைப் பாதுகாத்தல் போன்ற பணிகளை குறைப்பதே இந்த நடைமுறையின் முக்கிய நோக்கமாகும்.
மேலும், ஆவணங்களை மின்னணு முறையில் செயல்படுத்துவதன் மூலம் பதிவு நடவடிக்கைகளை எளிதாக கண்காணிக்கவும், ஆவணங்களை டிஜிட்டல் முறையில் பாதுகாத்து தேவையான நேரத்தில் மீட்டெடுக்கவும் முடியும்.
இதன் மூலம் பதிவுத்துறையில் வெளிப்படைத்தன்மை, செயல்திறன் மற்றும் பொதுமக்களின் வசதி மேம்படும்.
முக்கியமாக, இந்த புதிய நடைமுறை 02.11.2026 முதல் அமலுக்கு வருகிறது. எனினும், மென்பொருள் தயார்நிலை, தகுதி நிபந்தனைகள், தேவையான தொழில்நுட்ப மாற்றங்கள் மற்றும் அலுவலர்களுக்கான பயிற்சி உள்ளிட்ட பணிகள் நிறைவு செய்யப்பட்டிருப்பது இதன் செயல்பாட்டிற்கு அவசியம்" என அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

