இனி 'பெட் டாக்' வளர்க்க புதிய விதிகள்! ஆக்ரோஷமான நாய்களைக் கட்டுப்படுத்த தமிழக அரசு அதிரடி நடவடிக்கை..!

 
1

தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் முதன்மைச் செயலளார் கார்த்திகேயன், வெளியிட்டுள்ள அரசாணையில், “மத்திய அரசு ஏற்கனவே சில நாய் இனங்களை மனித உயிருக்கு ஆபத்தானவை என அடையாளம் கண்டு, அவற்றின் இறக்குமதி மற்றும் விற்பனைக்குத் தடை விதிக்க பரிந்துரைத்து உள்ளது.

மேலும், தடை செய்யப்பட்ட நாய் இனங்களை வைத்திருக்கவும், இனப்பெருக்கம் செய்யவும், விற்பனை செய்யவும் உள்ளாட்சி அமைப்புகள் உரிமம் வழங்கி அனுமதிக்கக் கூடாது எனவும், ஏற்கனவே செல்லப் பிராணியாக வளர்க்கப்பட்டால், கருத்தடை செய்து இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.

மத்திய அரசு, நாய் இனப்பெருக்கம் மற்றும் சந்தைப்படுத்தல் விதிகள், 2017 மற்றும் விலங்குகள் மீதான வன்கொடுமை தடுப்பு செல்லப்பிராணி தடை விதிகள், 2018 ஆகியவற்றை வெளியிட்டுள்ளது. மேலும், இந்த விதிகளை செயல்படுத்துவது உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் மாநில விலங்கு நல வாரியம் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறைக்கு சொந்தமானது எனவும், விதிகளை செயல்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடுமாறும் கேட்டுக் கொண்டுள்ளது” என்று கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில், சென்னை மாநகராட்சி ஆணையர் அரசுக்கு அளித்துள்ள கடிதத்தில், குறிப்பிட்ட சில நாய் இனங்கள் பொதுமக்களுக்கு அதிக தீங்கு விளைவிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். எனவே, அத்தகைய நாய்களை வளர்ப்பதற்கான உரிமங்களை வழங்குவதை நிறுத்தவும், ஏற்கனவே உள்ள உரிமங்களைப் புதுப்பிக்காமல் தடை செய்யவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை சேவைகள் இயக்குநர் தனது கடிதத்தில், ஆபத்தான நாய் இனங்களை ஒழுங்குபடுத்த அல்லது தடை செய்ய, பெருநகர சென்னை மாநகராட்சியின் தற்போதைய சட்டங்கள் மற்றும் விதிகளின்படி, செல்லப்பிராணி மற்றும் தெரு நாய் துணைச் சட்டங்களை உருவாக்குவதற்கு அரசாங்கத்திற்கு வழிகாட்ட ஒரு நிபுணர் குழுவை அமைக்க பரிந்துரைத்துள்ளார்.

இந்த குழுவினர்,

  • ஏற்கனவே உள்ள தற்போதைய விதிமுறைகளை மதிப்பாய்வு செய்யலாம்.
  • நாய்களின் உரிமை, கையாளுதல் தொடர்பாக நிலையான வழிகாட்டுதல் நெறிமுறைகளை வகுக்க வேண்டும்.
  • மாநில துணைச் சட்டங்கள் மற்றும் நடைமுறை பாதுகாப்பு நெறிமுறையைத் தயாரிப்பதில் உதவ வேண்டும்.

போன்றவைகளை குழு கண்காணித்து அரசுக்கு வழிகாட்ட வேண்டும். மேலும், தமிழ்நாடு அரசு செல்லப்பிராணிகள் மற்றும் தெரு நாய்கள் துணை விதிகள் Pet and Community Dog Bye-laws) என்ற வரைவு விதிகளை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது. இந்த விதிகளை வடிவமைக்கும் பொறுப்பு தற்போது அமைக்கப்பட்டுள்ள குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த நிபுணர் குழு, ஆக்ரோஷமான நாய்களைக் கையாளுதல், உரிமையாளர்களுக்கான நிலையான நடைமுறைகள் மற்றும் தற்போதுள்ள விதிகளை மறுஆய்வு செய்தல் ஆகிய பணிகளை மேற்கொள்ளும்.

நகராட்சி நிர்வாக இயக்குநர் தலைவராகவும், தமிழ்நாடு விலங்கு நல வாரியத்தின் தலைமைச் செயல் அதிகாரி உறுப்பினர் செயலாளராகவும், தமிழ்நாடு நகராட்சி இயக்குநர், பெருநகர சென்னை மாநகராட்சி சுகாதார இணை ஆணையர், ஊரக உள்ளாட்சித்துறை இயக்குநர், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தால் நியமிக்கப்படும் நிபுணர், தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு மற்றும் சேவைகள் துறையின் உதவி இயக்குநர், நாய்களின் நடத்தை மற்றும் உளவியல் ரீதியான செயல்களை அறிந்த ஒருவர் என 8 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது என கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.