புதிய நாடாளுமன்ற கட்டட வழக்கு தள்ளுபடி! - உச்சநீதிமன்றம் அதிரடி..

நாடாளுமன்றத்தின் புதிய கட்டடத்தை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு திறந்து வைக்கக்கோரிய வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
தலைநகர் டெல்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள நாடாளுமன்றக் கட்டடம் வருகிற மே 28ஆம் தேதி பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மரபுப்படி புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை குடியரசு தலைவர் தான் திறந்து வைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் குரல் கொடுத்து வருகின்றன. இதனை வலியுறுத்தி மத்திய அரசின் இந்த விழாவை நிராகரிக்க திமுக, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் என 19 கட்சிகள் கூட்டாக அறிவித்துள்ளன. .
இந்நிலையில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை குடியரசுத் தலைவர் திறந்து வைக்க வேண்டும் என மக்களவை செயலகம் மற்றும் மத்திய அரசுக்கு உத்தரவிட கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுமக்கள் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அவர் தனது மனுவில், நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்க வேண்டும் என்று நேரில் மக்களை சபாநாயகர் அழைப்பு விடுத்தார்; ஆனால் குடியரசுத் தலைவருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்ற கட்டிடத்தை திறக்க குடியரசு தலைவரை அழைக்காததன் மூலம் அரசியல் சட்டத்தை மக்களவை செயலகம் மீறிவிட்டது எனவும் கூறியிருக்கிறார்.
இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது பொதுநல வழக்கை விசாரிக்க மாட்டோம் என நீதிபதிகள் தெரிவித்தனர். இதனையடுத்து மனுதாரர் மனுவை திரும்ப பெற்றார். நாடாளுமன்றத்தின் புதிய கட்டடத்தை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு திறந்து வைக்கக்கோரிய வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.