லோக்சபாவில் புதிய மாற்றம்..! இனி தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் அமர்ந்துதான் வருகையை பதிவு செய்ய வேண்டும்..!
நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவை அல்லது மாநிலங்களவை அறைகளுக்குள் நுழைவதற்கு முன்பு நேரில் வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுவார்கள். புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில், வருகைப் பதிவேடு டிஜிட்டல் மயமாக்கப்பட்டு, லாபிகளில் நான்கு டேப்லெட்டுகள் வைக்கப்பட்டன.நாடாளுமன்றத்தை காகிதமற்றதாக மாற்றும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, டேப்லெட்டில் தங்கள் வருகையைக் குறிக்க எம்.பி.க்கள் டிஜிட்டல் பேனாவைப் பயன்படுத்தினர்.
எம்.பி.க்கள் தங்கள் ஐ-கார்டைப் பயன்படுத்தியோ அல்லது பயோமெட்ரிக் (தம்ப் இம்ப்ரெஷன்) மூலமாகவோ மற்றும் பின்னை உள்ளிடுவதன் மூலம் தங்கள் வருகையைப் பதிவு செய்யலாம்.மாநிலங்களவை விரைவில் புதிய முறையைப் பின்பற்ற வாய்ப்புள்ளது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 21 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இக்கூட்டத்தொடரில், லோக்சபா எம்.பி.க்களின் வருகையை பதிவு செய்ய புதிய முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
இதுவரை லாபியில் கையெழுத்திடுவதற்கு பதிலாக, இனிமேல் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் அமர்ந்துதான் வருகையை பதிவு செய்ய வேண்டும் என்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது லாபியில் எம்.பி.க்கள் நீண்ட வரிசையில் நின்று கையெழுத்திடுவதை தவிர்க்க முடியும் என்றும், அதேபோல் லாபியில் கையெழுத்திட்டுவிட்டு வெளியே செல்வதை தவிர்க்க முடியும் என்றும் கூறப்படுகிறது. சபாநாயகர் ஓம் பிர்லா இந்த புதிய நடைமுறையை அறிமுகம் செய்ய ஆர்வமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால், அதே நேரத்தில் அமைச்சர்கள் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் தங்கள் வருகையை பதிவு செய்யத் தேவையில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.


