NEET UG 2026 : நீட் மறுதேர்வு முடிவுகள் எப்போது? வெளியான புதிய தகவல்...!

 
neet

ஜூலை 20-க்குள் நீட் மறுதேர்வு முடிவுகள் (Re-NEET UG) வெளியிடப்படும் என்று தேசிய தேர்வு முகமை (NTA) அறிவித்துள்ளது.

எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு நீட் தேர்வு நடத்தப்படுகிறது. இதில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையிலேயே மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இந்த ஆண்டுக்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த மே 3ஆம் தேதியன்று நடைபெற்றது. நாடு முழுவதும் நடத்தப்பட்ட இந்த தேர்வின் வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதால், வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடு காரணமாக ரத்து செய்யப்பட்டது. இவ்விவகாரத்தில் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து, நீட் மறு தேர்வு ஜூன் 21ஆம் தேதி நடைபெற்றது. பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.15 மணி வரை தேர்வு நடைபெற்றது. தொடர்ந்து ஜூன் 25ஆம் தேதி தற்காலிக விடைக் குறிப்பு வெளியானது.

ஆட்சேபிக்க ஜூன் 28ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்ட நிலையில், சுமார் 10 ஆயிரம் ஆட்சேபனைகள் இதில் பெறப்பட்டன. இந்த நிலையில், இதுகுறித்த மதிப்பீடு நடைபெற்று இறுதி விடைக் குறிப்பு வெளியிடப்பட்டது.

இதைத் தொடர்ந்து ஜூலை 20ஆம் தேதி நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகள் வெளியான பிறகு, மருத்துவ கலந்தாய்வுக் குழு தொடர்ந்து அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான சேர்க்கையைத் தொடங்கும். மாநில ஒதுக்கீட்டின்கீழ் அந்தந்த மாநில அரசுகள், மாணவ சேர்க்கைப் பணியை நடத்தும்.

ஏற்கெனவே தமிழ்நாட்டில் மருத்துவப் படிப்புகளில் சேர விண்ணப்பப் பதிவு தொடங்கி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. 

மாணவர்கள் தேர்வு முடிவுகளை https://neet.nta.nic.in/ என்ற இணைப்பை க்ளிக் செய்து அறியலாம்.