நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தமிழிசை வாழ்த்து!!

 
tamilisai

 நீட் தேர்வை எழுதும் மாணவர்களுக்கு ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வாழ்த்து கூறியுள்ளார்.  

 நாடு முழுவதும் இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு இன்று நடைபெறுகிறது.  எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புகளில் சேர தமிழ், இந்தி உள்பட 13 மொழிகளில் நடக்கும் நீட் நுழைவுத்தேர்வை சுமார் 18.72 லட்சம் பேர் எழுதுகின்றனர். தமிழ்நாட்டில் 18 நகரங்களில் நடைபெறும் இத்தேர்வை எழுத சுமார் 1.42 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.  பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி மாலை 5.20 மணி வரை தேர்வு நடைபெற உள்ளது. 

neet

இந்நிலையில் தெலுங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஏழை,எளிய மாணவர்களின் மருத்துவ கனவை நனவாக்கும் நீட் தேர்வை இன்று எழுதுகின்ற அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

tamilisai

நீட் தேர்வினால் தனியார் மருத்துவக்கல்லூரிகளின் கட்டண கொள்ளையை அறவே தடுத்ததோடு தனியார் மருத்துவ கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கு 50% இடங்கள் அரசு மருத்துவக்கல்லூரி கட்டணத்தை போலவே கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் தலைமையிலான மத்திய அரசு நாடு முழுவதும் மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக்கல்லூரி என்ற இலக்கோடு மருத்துவக்கல்லூரிகளில் MBBS இடங்களை மூன்று மடங்கு உயர்த்தியும், அரசு மருத்துவக்கல்லூரிகளின் எண்ணிக்கையையும்  தனியார் மருத்துவக் கல்லூரிகளை விட  அதிகமாகவும் அமைத்துள்ளது.



ஒரே ஒரு எய்ம்ஸ் இருந்த காலம்போய் கடந்த 8 ஆண்டுகளில் நாடு முழுவதும் 15 எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவக்கல்லூரிக்கு அனுமதி அளிக்கப்பட்டு அதில் 12 எய்ம்ஸ் மருத்துவமனைகள்  இயங்கி கொண்டிருக்கின்றன. இதை எல்லாம் மனதில் வைத்துக்கொண்டு தன்னம்பிக்கையுடன் நீட் தேர்வு எழுதி வெற்றி பெற்று மருத்துவம் பயில எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார். 
.