நீட் எனும் உயிர்க்கொல்லி - நுழைவுத் தேர்வை அகில இந்தியாவில் கைவிட திருமாவளவன் கோரிக்கை!

 
thiruma

தமிழ்நாடு அரசு நிறைவேற்றியுள்ள நீட் விலக்கு மசோதாவுக்கு உடனே ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

thiruma

இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், எம்.பி.யுமான திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஒன்றியம், வயலப்பாடி அருகேயுள்ள கீரனூர் கிராமத்தைச் சார்ந்த பள்ளி மாணவி நிஷாந்தினி நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்துகொண்டார் என்ற தகவலறிந்து மிகுந்த வேதனையும் துக்கமும் மேலிடுகிறது. அவரது குடும்பத்தை எண்ணி வெகுவாகத்  துயர்ப்படுகிறேன்.  மருத்துவம் படிப்பதுதான் மானத்திற்குரியது என்று இந்த பெண்பிள்ளைக்கு யார்தான்  கற்பித்தது? நீட் தேர்வில் தேர்ச்சியடையாவிட்டாலும் ; அல்லது தேர்ச்சிப் பெற்றாலும் மருத்துவம் படிக்க இடம் கிடைக்காவிட்டால் அப்படி என்ன இழுக்கு ஏற்பட்டு விடும்?  வ.கீரனூர் கிராமத்துக்கு அருகேயுள்ள குழுமூர் கிராமத்தைச் சார்ந்த அனிதாவைத் தொடர்ந்து இப்படி அடுக்கடுக்கான தற்கொலைகள் நடப்பது ஆழ்ந்த கவலையை அளிக்கிறது. 

Thiruma

ஒவ்வொரு சாவின் போதும் "தற்கொலை வேண்டாமென்று"  ஓங்கி உரத்துக் கத்துகிறோமே, எமது குரல்  மாணவ- மாணவியர் செவிகளில் விழவே இல்லையா? அண்மையில் (சூலை 09) ஓசூர் முரளி கிருஷ்ணா நீட் தேர்வு அச்சத்தால் தன்னைத் தானே மாய்த்துக் கொண்ட அவலம் நிகழ்ந்தது. இது ஒரு தொடர்கதையாக இன்னும்  நீடிப்பது சொல்லொணா துயரத்தை அளிக்கிறது. இத்தனை இளங்குருத்துகள் நீட் என்னும்  கொடிய நஞ்சினால் அவிந்துபோயுள்ள நிலையிலும் இந்திய ஒன்றிய ஆட்சியாளர்களின் நெஞ்சில் ஒருதுளியும் ஈரமில்லை என்பது பேரதிர்ச்சியை அளிக்கிறது.அனிதா முதல் நிஷாந்தி வரை இதுவரையில் 17 பேரை தமிழ்நாடு நீட்டுக்குப் பறிகொடுத்துள்ளது. ஆனால், இந்திய ஆட்சியாளர்கள் கொஞ்சமும் அசைந்து கொடுக்கவில்லை.  ஈவிரக்கமில்லா இந்தக்  கும்பலின் கைகளில் ஆட்சியதிகாரம் சிக்கிக்கொண்டது. என்ன செய்ய?ஒருமுறைக்கு இருமுறை நீட் விலக்கு மசோதாவை சட்டப்பேரவையில் நிறைவேற்றி, தமிழ்நாடு அரசு குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தும் ஃபாசிச பாஜக அரசு மெத்தனம் காட்டிவருகிறது. அதற்கு ஒப்புதல் அளிக்காமல் இன்னும் காலம் தாழ்த்தி வருவதன் விளைவாகவே அடுத்தடுத்து இரண்டு மாணவர்கள் பலியாக நேர்ந்துள்ளது. எனவே, முரளிகிருஷ்ணா( ஜூலை 07) நிஷாந்தி(ஜூலை 16) ஆகிய இருவரின் சாவுக்கும் மோடி அரசே பொறுப்பேற்க வேண்டும்.

thiruma

இந்நிலையில், இவ்விரு மாணவச் செல்வங்களின் உயிரிழப்புக்குக் காரணமான ஆர்எஸ் எஸ்  மற்றும் பாஜக அரசைக் கண்டித்தும்; தமிழ்நாடு அரசின் நீட் விலக்கு மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வலியுறுத்தியும்; நிஷாந்தி குடும்பத்தில்ஒருவருக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்கிட வேண்டியும்;   அக்குடும்பத்திற்கு இழப்பீடாக ரூ. ஒரு கோடி  வழங்கிட கோரியும் விசிக சார்பில் பெரம்பலூரில்  இன்று (சூலை 17) காலை 10.00 மணியளவில் விடுதலைச் சிறுத்தைகளின் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. அரியலூர் பெரம்பலூர் மாவட்ட சிறுத்தைகள் தவறாமல் பங்கேற்று ஆர்ப்பாட்டத்தை வெற்றிகரமாக நடத்திட முன்வர வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். நீட் என்னும் உயிர்க்கொல்லி நுழைவுத் தேர்வை எதிர்த்து ஃபாசிச பாஜக அரசைக் கண்டிக்கும் இந்த அறப்போராட்டத்தில் அனைத்துச் சனநாயக சக்திகளும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டுமென அறைகூவல் விடுக்கிறேன்"என்று குறிப்பிட்டுள்ளார்.