நீட் தேர்வர்களே..!! மன அழுத்தத்தை போக்க உதவி எண் அறிமுகம்!

 
Q

'நீட்' நுழைவுத்தேர்வு அடுத்த மாதம் (மே) 3-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வை எழுத தமிழகத்தில் 2 லட்சம் மாணவ-மாணவிகள் உள்பட நாடு முழுவதும் 28 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். தேர்வுக்கான ஏற்பாடுகளை தேசிய தேர்வு முகமை(NTA) செய்து வருகிறது.

இந்த நிலையில், நீட் தேர்வு எழுத உள்ள மாணவர்கள் மன அழுத்தம் மற்றும் பதற்றமின்றி தேர்வை எதிர்கொள்ள தேசிய தேர்வு முகமை முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

உயிரை விட எதுவும் முக்கியம் இல்லை என்பதை மாணவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் எனவும், மிகுந்த மன அழுத்தம் மற்றும் பதற்றத்தை உணரும் மாணவர்கள் 14416 அல்லது 1-800-891-4416 ஆகிய உதவி எண்களை தொடர்பு கொண்டு, பல மொழிகளில் ஆலோசனை பெறலாம் என்றும் தேசிய தேர்வு முகமை அறிவுறுத்தியுள்ளது.

தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில்,

நீட் தேர்வர்களே,

உங்கள் மனநலமும் நல்வாழ்வும் எங்களின் முதன்மையான முன்னுரிமையாகும். உங்கள் உயிரை விட எந்தத் தேர்வும் முக்கியமில்லை.

நீங்கள் மன அழுத்தம், பதற்றம் அல்லது மிகுந்த மனச்சுமையை உணர்ந்தால், உடனடியாக இந்த அதிகாரப்பூர்வ உதவி எண்களைத் தொடர்பு கொள்ளவும்:

டெலி-மனஸ் (24×7 தேசிய மனநல உதவி எண்)14416 அல்லது 1-800-891-4416 .

இது 24 மணி நேரமும் இயங்கும் இலவச தொலைப்பேசி சேவை என்றும் இதில் ஆலோசனை பெறும் தேர்வர்களின் ரகசியங்கள் பாதுகாக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.