இன்று நீட் தேர்வு : நாடு முழுவதும் 24 லட்சம் பேர் எழுதுகின்றனர்..!

 
1

நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் மற்றும் சித்தா, ஆயுர்வேதா உள்ளிட்ட படிப்புகளுக்கான இடங்களுக்கு நீட் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. அதன்படி, நடப்பு கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு, இன்று நடைபெறுகிறது. 557 நகரங்களில் பிற்பகல் 2 மணி முதல் 5.20 மணி வரை இத்தேர்வு நடைபெற உள்ளது. 14 வெளிநாடுகளிலும் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. தேர்வை 24 லட்சம் மாணவ, மாணவிகள் எழுத உள்ளனர். தமிழ்நாட்டில் ஒன்றரை லட்சம் மாணவ, மாணவிகள் எழுதுகிறார்கள்.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கோவை, கடலூர், கரூர், தர்மபுரி, ஈரோடு, சேலம், தூத்துக்குடி, மதுரை, திண்டுக்கல், கன்னியாகுமரி, வேலூர், தஞ்சாவூர், விழுப்புரம், நீலகிரி, திருவாரூர், திருவண்ணாமலை, ராமநாதபுரம், புதுக்கோட்டை உள்பட 31 நகரங்களில் நீட் தேர்வு நடக்கிறது.

தமிழ், ஆங்கிலம், இந்தி உள்பட 13 மொழிகளில் தேர்வு நடைபெற உள்ளது. நீட் தேர்வு பிற்பகல் 2 மணிக்கு தொடங்கும் நிலையில், மாணவர்கள் மதியம் 1.30 மணிக்குள் தேர்வு மையங்களுக்கு வருகை தரவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. நீட் தேர்வுக்கான ஹால்டிக்கெட்களில் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்களை மாணவர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று தேசிய தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது.

ஆடை கட்டுப்பாடுகள், முடி, ஷூ, பெல்ட் அணிதல் போன்றவை வழக்கம் போல் பின்பற்றப்படுகிறது. தேர்வு மையத்திற்கு செல்போன், கால்குலேட்டர் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் கொண்டு வர தடைவிதிக்கப்பட்டுள்ளது. பதட்டம் இல்லாமல் இருக்க முன் கூட்டியே வரவும் தேர்வு அனுமதி சீட்டுடன் புகைப்படம் கொண்டு வரவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கோடை வெயில் வறுத்து எடுத்து வரும் வேளையில் இத்தேர்வு நடைபெறுகிறது. தேர்வு எழுதும் நகரங்களில் தேர்வர்கள் தவிர வேறு யாரையும் அனுமதிக்கக்கூடாது என்று தேசிய தேர்வு முகமை கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. உறவினர்கள் மையங்களுக்கு வெளியே இருக்க வேண்டும் எனவும் தேவையான அளவு போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யவும் தேர்வு நடத்தும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தேர்வு கூடங்களில் ஒழுங்கீனங்கள் தவறுகள் நடக்காமல் இருக்க தீவிர கண்காணிப்பு அவசியம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.