வெற்று விளம்பரத்திற்காக மக்களிடம் நலம் விசாரிக்கும் திமுக அரசு - சசிகலா கடும் கண்டனம்.

 
sasikala

தமிழகத்தில் மக்கள் படும் துன்பங்களைப் போக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல், வெற்று விளம்பரத்திற்காக மக்களிடம் நலம் விசாரிக்கும் திமுக தலைமையிலான அரசு என்று சசிகலா கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக தலைமையிலான அரசு பொறுப்பேற்றது முதல் தமிழக மக்கள் பல்வேறு வகையில் பெரும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு மக்களின் பாதுகாப்பே இன்றைக்கு கேள்விக்குறியாகி விட்டது. தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, வழிப்பறி, கட்டப்பஞ்சாயத்து, போதை பொருள் கடத்தல் என அனைத்தும் சர்வ சாதாரணமாக நடைபெறுகிறது. இதில் கொடுமை என்னவென்றால்? இதுபோன்ற சமூக விரோத செயல்களில் பெரும்பாலும் ஆளும் கட்சியை சேர்ந்தவர்களே சம்பந்தப்பட்டிருப்பது தற்போது வெட்ட வெளிச்சமாகி வருகிறது. தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், போக்குவரத்து தொழிலாளர்கள், வியாபாரிகள், சிறுகுறு தொழில் முனைவோர், விவசாய பெருங்குடிமக்கள் என அனைத்து தரப்பினரும் தங்களது அடிப்படை தேவைகளுக்காக ஒவ்வொரு நாளும் போராடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஆனால், திமுக தலைமையிலான அரசு இவற்றையெல்லாம் கண்டும் காணாமல் இருந்துகொண்டு, மக்கள் படும் துன்பங்களைப் பற்றி கொஞ்சமும் சிந்திக்காமல், அவர்களிடம் நல்லா இருக்கீங்களா என்று குசலம் விசாரிப்பதால் என்ன பயன்? திமுக தலைமையிலான அரசு தொலைக்காட்சிகளில் வரும் தொடர்களின் பெயரை போன்று நீங்கள் நலமா? என்று தமிழக மக்களிடம் நாடகமாடினால் அதை நம்பி இனிமேல் யாரும் ஏமாற மாட்டார்கள்.

sasikala

நலமாக இருக்கிறீர்களா? என்று யாரை கேட்பார்கள்? பொதுவாக வெளியூர்களிலிருந்து வந்தவர்கள் புதிதாக யாரையாவது சந்திக்கும் போது நீங்கள் நலமாக இருக்கிறீர்களா? என்று கேட்பதுதான் தமிழர் பண்பாடு. ஆனால், தமிழக முதல்வரோ தனது சொந்த மாநில மக்களையே நலமா இருக்கீங்களா என்று கேட்பது வேடிக்கையாக இருக்கிறது. அதாவது, தமிழக மக்கள் ஒவ்வொருநாளும் அனுபவித்து கொண்டிருக்கும் எண்ணற்ற துன்பங்களை பற்றி எதுவும் அறிந்திடாத ஒரு முதல்வர்தான் இன்றைக்கு தமிழ்நாட்டை ஆண்டு கொண்டிருக்கிறார் என்பதை எண்ணிப்பார்க்கும் போது மிகவும் வேதனையாக இருக்கிறது.

தமிழக மக்கள் தற்போதைய விலைவாசியை எண்ணி இருண்ட உலகத்தை விட்டு வெளியில் வர முடியாமல் தவித்து வரும் நிலையில் நீங்கள் நலமா என்று மக்களை பார்த்து கேட்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது.

தமிழகமெங்கும் போதை பொருள் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருப்பதால் திமுக தலைமையிலான விளம்பர அரசின் ஐம்புலன்களும் செயலிழந்து விட்டதாக எண்ணத்தோன்றுகிறது. 

தமிழகத்தில் சொத்து வரி உயர்வு, பத்திர பதிவு கட்டண உயர்வு, ஆவின் பால் பொருட்களின் விலை உயர்வு, வரலாறு காணாத மின் கட்டண உயர்வு என மக்களை மீளா துயரில் ஆழ்த்திவிட்டு மக்களைப் பார்த்து நீங்கள் நலமா என கொஞ்சமும் கூச்சப்படாமல் திமுக விளம்பர அரசு கேட்பது மிகவும் வேதனை அளிக்கிறது. 

sasikala

பயிர்கடன்கள் மற்றும் நகைக்கடன்கள் முழுவதும் தள்ளுபடி செய்யப்படும் என்று திமுகவினர் அளித்த பொய்யான வாக்குறுதியை நம்பி, தங்கள் நகைகளை அடமானம் வைத்த விவசாயிகள் இன்றைக்கு நகைகளை திருப்ப முடியாமல் கைவிட்டு போன நிலையில், விவசாயிகளிடம் நலம் விசாரிப்பதால் அவர்கள் இழந்த நகை திரும்ப கிடைக்குமா?

பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்றுவோம் என அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரிய பெருமக்களுக்கு ஆசை வார்த்தை கூறிவிட்டு, ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு சேரவேண்டிய தொகையை கூட கொடுக்க முடியாத அரசு மக்களிடம் நலம் விசாரிப்பது கொடுமையிலும் கொடுமை தான். 

நீட் தேர்வை ஒழிப்பதாக அண்டமே அதிரும் அளவிற்கு சத்தியம் செய்து ஆட்சியில் அமர்ந்த திமுகவினர் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றிடாமல், இன்றைக்கு அடுத்த தேர்தலுக்கு ஆயத்தமாகி வருகிறது.

நா கூசாமல் எதையும் நாசுக்காக கூறி மக்களை ஏமாற்றும் இந்த அரசு இதுவரை எத்தனை இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கியுள்ளது என்பதை வெள்ளை அறிக்கையாக வெளியிட தயாரா?.

sasikala

திமுக தமிழகத்தில் ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து போதை பொருட்களின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. நம் நாட்டில் உள்ள பல மாநிலங்களுக்கு போதை பொருட்களை கொண்டு செல்லக்கூடிய வகையில் போதை பொருள் கடத்தல் மையமாக தமிழகம் மாறி இருக்கிறது. இத்தகைய அபாயகரமான சூழ்நிலையில் பாதுகாப்பான வாழ்க்கையை மக்கள் தேடி அலையும் நிலையில், மக்களுக்கு தேவையான பாதுகாப்பை அளித்திடாமல் திமுக தலைமையிலான அரசு நலம் விசாரிப்பது எந்த விதத்தில் நியாயம்?. 

புரட்சித்தலைவி அம்மா அவர்கள் “மக்களால் நான் மக்களுக்காகவே நான்” என தனது இறுதி மூச்சுவரை மக்களின் நலனை மட்டும் சிந்தித்து வாழ்ந்தவர். ஒரு தாய் தனது பிள்ளைகளுக்கு தேவையானவற்றை அவர்கள் கேட்காமலே எவ்வாறு செய்து கொடுப்பாரோ, அதேபோன்று புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தமிழக மக்களின் தேவைகளை அறிந்துகொண்டு அவர்களுக்கு அனைத்தையும் செய்து கொடுத்தார். ஆனால் இன்றைக்கு திமுகவினர் தமிழக மக்களுக்கு எந்தவித நன்மைகளையும் செய்யவில்லை. மாறாக அவர்களை ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு வகையில் கசக்கி பிழிந்து கொண்டிருக்கிறது. இவ்வாறு இந்த விளம்பர ஆட்சியில் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மறக்க முடியாத துன்பங்களை தமிழக மக்கள் அனுபவித்து வரும் வேளையில், இதுபோன்று நலம் விசாரித்து மக்களை மேலும் துன்பத்திற்கு ஆளாக்க வேண்டாம். எனவே, இதுபோன்று வெற்று விளம்பரத்திற்காக செலவிடும் அரசு பணத்தை, மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்கு பயன்படுத்துவது நல்லது என  திமுக தலைமையிலான அரசைக் கேட்டுக்கொள்கிறேன். என்று குறிப்பிட்டுள்ளார்.