புதுச்சேரி காங்கிரஸ் அலுவலகத்தில் தலைகீழாக ஏற்றப்பட்ட தேசிய கொடி

புதுச்சேரியில் நேற்று தேசிய கீதம் அவமதிப்பு செய்யப்பட்ட நிலையில், இன்று தேசிய கொடி அவமதிப்பு செய்யபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
300 ஆண்டுகள் பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்த பாண்டிச்சேரி, நவம்பர் 1-ந்தேதி இந்தியாவுடன் இணைந்தது. இந்த நாள் விடுதலை திருநாளாக புதுச்சேரியில் கொண்டாடபட்டு வருகிறது. புதுச்சேரி அரசு சார்பில் கடற்கரை சாலையில் நடைபெற்ற விழாவில், முதல்வர் ரங்கசாமி தேசிய கொடியை ஏற்றினார். இதே போல் புதுச்சேரி காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில், மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்பி தேசிய கொடியை ஏற்றினார். அப்போது தேசிய கொடி தலைகீழாக ஏற்றப்பட்டது.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த காங்கிரஸ் கட்சியினர், தேசிய கொடியை அவசர அவசரமாக கீழே இறக்கினர். பின்பு அதை சரி செய்து மீண்டும் ஏற்றினர். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி, வைத்தியநாதன் எம்எல்ஏ மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நேற்று ஒற்றுமை ஒட்டம் தினத்தில் சபாநாயகர் செல்வம், தேசிய கீதம் ஒலிக்கும் போது செல்போனில் பேசினார். இன்று விடுதலை திருநாள் விழாவில் காங்கிரஸ் கட்சியினர் தேசிய கொடியை தலை கீழாக ஏற்றியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.