மூன்றாவது முறை இந்தியப் பிரதமராக பதவி ஏற்றார் மோடி..!

 
1

திரு நரேந்திர மோடி ஞாயிறு (ஜூன் 9) மாலை இந்திய பிரதமராக பதவி ஏற்றுக்கொண்டார்.அவருடன் 72 பேர் அடங்கிய அமைச்சரவையும் பதவி கொண்டனர். அனைவருக்கும் அதிபர் திரௌபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அவர்களில் பிரதமர் தவிர்த்து 30 பேர் கேபினட் அமைச்சர்கள், 36 பேர் இணை அமைச்சர்கள், ஐவர் தனி அந்துஸ்து பெற்ற இணை அமைச்சர்கள். 11 அமைச்சர்கள் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள்.

 

திரு மோடி பிரதமர் பதவி ஏற்பது இது மூன்றாவது முறை.இந்திய நேரம் இரவு 7.15 மணியளவில் தொடங்கிய பதவி ஏற்பு விழா ஏறக்குறைய இரண்டு மணி நேரம் நீடித்ததது.பாஜக மற்றும் என்டிஏ கூட்டணியின் முக்கிய தலைவர்கள், பல்வேறு நாடுகளின் அரசதந்திரிகள் போன்றோருடன் பொதுமக்களையும் உள்ளடக்கிய 9,000க்கும் மேற்பட்டோர் விழாவில் பங்கேற்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

தனிப்பெரும்பான்மையுடன் கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சி செய்துவந்த பாஜக, இந்த முறை தனிப்பெரும்பான்மை பெறத் தவறியதால் தெலுங்கு தேசம் மற்றும் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணிக் (என்டிஏ கூட்டணி) கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது.

என்டிஏ கூட்டணியில் 16 இடங்களில் வென்ற தெலுங்கு தேசக் கட்சியே அந்தக் கூட்டணியில் பெரிய கட்சியாக உள்ளது. அந்தக் கட்சியோடு ஐக்கிய ஜனதா தளம், சிவசேனா போன்ற கட்சிகளைச் சேர்ந்தோரும் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

கர்நாடக மாநிலத்தில் பாஜக கூட்டணியில் வெற்றிபெற்ற மதச்சார்பற்ற ஜனதா தளத் தலைவர் எச்டி குமாரசாமிக்கும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டு உள்ளது.

முக்கியத்துவம் வாய்ந்த நிதித் துறை, உள்துறை, தற்காப்புத் துறை, போக்குவரத்துத் துறை, வெளியுறவுத் துறை போன்ற முக்கிய பதவிகள் முன்பைப்போல பாஜகவினருக்கு தரப்பட்டுள்ளன. நிர்மலா சீதாராமன், அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்காரி, ஜெய்சங்கர் ஆகியோர் மீண்டும் அமைச்சர் ஆகி உள்ளனர்.

பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவும் அமைச்சராகப் பதவி ஏற்றதால், தேசிய தலைவர் பொறுப்பில் புதியவர் நியமிக்கப்படலாம்.

ஒவ்வோர் அமைச்சரும் பதவி ஏற்ற முடித்ததும் திரு மோடி, திரு அமித் ஷா, திரு ராஜநாத் சிங் ஆகியோரிடம் ஆசி பெற்றனர். மூவரும் எழுந்து நின்று அமைச்சர் ஒவ்வொருவரையும் வாழ்த்தினர்.

இதற்கு முன்னர் பதவியில் இருந்த மோடியின் அமைச்சரவையில் 81 பேர் இடம்பெற்று இருந்தனர்.

பதவி ஏற்பு விழாவை முன்னிட்டு, டெல்லியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

பதவி ஏற்பு விழா நிகழும் அதிபர் மாளிகை அமைந்திருக்கும் பகுதியில் பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு, போக்குவரத்து முடக்கப்படும் என காவல்துறை அதிகாரிகள் ஏற்கெனவே தெரிவித்து இருந்தனர்.

முன்னதாக, காலையில் டெல்லி ராஜ்காட்டில் அமைந்துள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்துக்குச் சென்ற மோடி, அங்கு மரியாதை செலுத்தினார்.

மோடி அமைச்சரவை பதவி ஏற்பு விழாவில் உலகத் தலைவர்கள் சிலரும் கலந்துகொண்டனர்.

இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க, மாலத்தீவு அதிபர் டாக்டர் முகமது முய்சு, சீஷெல்ஸ் துணை அதிபர் அகமது அஃபிஃப், பங்ளாதேஷ் பிரதமர் ஷேக் ஹசினா, மொரிஷியஸ் பிரதமர் பிரவிந்த் குமார் ஜக்நாத், நேப்பாளப் பிரதமர் புஷ்ப கமல் தஹல் பிரசந்தா, பூட்டான் பிரதமர் ஷெரிங் டோப்கே ஆகியோர் அவர்கள்.

இருப்பினும், அண்டை நாடுகளான பாகிஸ்தானும் சீனாவும் அவ்விழாவுக்கு யாரையும் அனுப்பவில்லை.

நடிகர் ரஜினிகாந்த், ஷாருக்கான், அக்‌ஷய் குமார் உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்களும் பதவி ஏற்பு விழாவில் கலந்துகொண்டனர்.

புதிதாக பதவி ஏற்றுள்ள 18வது மக்களவையின் முதல் நாடாளுமன்றக் கூட்டம் ஜூன் 24ஆம் தேதி தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது