கூட்டணி கட்சிகளுடன் கருத்து வேறுபாடு உள்ளது உண்மை தான் - நாரயணசாமி பேட்டி

 
Narayanasamy

மேற்கு வங்கம், பஞ்சாபில் கூட்டணி பேச்சுவார்த்தையில் சில முரண்பாடுகள், கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன என புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயண சாமி தெரிவித்துள்ளார். 

புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், இந்தியா கூட்டணி உருவாக்குதற்கு முதன்முதலில் முயற்சி எடுத்தவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்; 28 கட்சிகள் சேர்ந்து 'இந்தியா' கூட்டணியை உருவாக்கினர். அதில் முன்னிலை வகித்தவர் நிதிஷ்குமார் ஆனால் அவரே முன்னின்று கூட்டணியை உருவாக்க முயற்சி எடுத்தார் என்று சொல்ல முடியாது. 'கூட்டணியில் தொய்வு ஏற்பட்டது. வேலை வேகமாக நடைபெறவில்லை' என்ற ஒரே ஒரு காரணத்தை கூறி கூட்டணியில் இருந்து நிதிஷ் வெளியேறி இருக்கிறார். அவர் அனுபவமிக்க அரசியல்வாதி. ஆனால் அடிக்கடி கட்சி மாறி கூட்டணி அமைப்பது அவர் மீதான மரியாதையை குறைத்திருக்கிறது நிதிஷ்குமார் வெளியேறியதற்கு நாடாளுமன்ற தொகுதிப் பங்கீட்டில் ராஷ்ட்டிரிய ஜனதா தளத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுதான் மிக முக்கியமான உள்காரணம் என கூறப்படுகிறது.


நிதிஷ்குமார் கூட்டணியில் இருந்து வெளியே சென்றது எங்கள் கூட்டணியில் ஓரளவு தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தாலும்கூட அவர்கள் எதிர்பார்த்த அளவுக்கு பாதிப்பு இருக்காது என்பதுதான் என் கணிப்பு. கூட்டணியில் கட்சிகள் கூடுவதும், குறைவதும் சகஜம்; 2019 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணியில் இருந்த கட்சிகள் இப்போது இருக்கிறதா? பாஜகவுடன் கூட்டணியில் இருந்த பல கட்சிகள் வெளியேறிவிட்டனர். 'இந்தியா' கூட்டணி கட்சிகளை விமர்சிப்பதற்கு முன் பாஜக தங்கள் முகத்தை கண்ணாடியில் பார்க்க வேண்டும். இன்னும் கொஞ்சம் காலத்தில் நிதிஷ்குமாரை பாஜக காலி செய்துவிடும். விரைவில் பிகாரில் பாஜக ஆட்சியை அமைக்கும். காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை மாநில கட்சிகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. மேற்கு வங்கம், பஞ்சாபில் கூட்டணி பேச்சுவார்த்தையில் சில முரண்பாடுகள், கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன. அதை சரிசெய்து இறுதி முடிவை எட்டுவோம் என குறிப்பிட்டுள்ளார்.