சென்னை மாநகரம் கலாச்சார சீர்கேட்டின் உச்சத்திற்கு சென்று கொண்டிருக்கிறது - நாராயணன் திருப்பதி

 
narayanan thirupathy

கலாச்சார சீர்கேட்டின் உச்சத்திற்கு சென்று கொண்டிருக்கிறது சென்னை மாநகரம் என தமிழக பாஜக துணை தலைவர் நாராயணன் திருப்பதி கூறியுள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், கலாச்சார சீர்கேட்டின் உச்சத்திற்கு சென்று கொண்டிருக்கிறது சென்னை மாநகரம். இதற்கு காரணம் யார்? என்ன? ஏன்? என்று ஆராய்வதற்கு முன் நம் முன்னே உள்ள கேள்விகள் பல. ஆண் மதுவுக்கு அடிமையானாலும், பெண் மதுவுக்கு அடிமையானாலும் குடும்பத்திற்கே கேடு. பெண்கள் 'Pub' க்கு செல்லக்கூடாதா? சட்டம்  தடுக்கிறதா? விதிகளை மீறி நேரம் கடந்து 'Pub' ஐ திறந்து வைத்தது யார் குற்றம்? வாடிக்கையாளர்கள் மீதா? மதுக் கூடத்தின் உரிமையாளர் மீதா? அல்லது தினந்தோறும் இந்த மதுக்கூடம் விதிகளை மீறி இயங்குவதை கண்டும் காணாமல் இருந்த காவல்துறையின் மீதா? ஊடகத்தை சார்ந்த ஒளிப்பதிவாளர்கள் பெண்களை பின்தொடர்ந்து ஒளிப்பதிவு செய்ய காரணம் என்ன? இது தனி மனித உரிமையை பாதிக்காதா?அவர்களை துரத்தி படம் பிடிப்பது அவமானப்படுத்துவது ஆகாதா?அவதூறு ஆகாதா? அப்படியே படம் பிடித்திருந்தாலும் அதை ஒளிபரப்புவது சட்டத்திற்கு உட்பட்டதா? ஊடக சுதந்திரம் என்பது இது தானா? அரைகுறை ஆடையில் ஓட்டம் என்று பதிவிடுவது முறையா? 


இந்த பார்களை இயக்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த பார்கள் நிரந்தரமாக மூடப்பட வேண்டும். இது போன்ற பார்களுக்கு இனி அனுமதி இல்லை என்று அரசு அறிவிக்க வேண்டும்.  பெண்களை குறிவைத்து செய்தி வெளியிடுபவர்கள் இனி பெண்களுக்கு பார்களில் அனுமதியளிக்க கூடாது என்று கோரிக்கை விடுப்பார்களா? சட்டம் அதை அனுமதிக்குமா? இது போன்ற செய்திகள் பெண்களை மையப்படுத்தி பரபரப்பை உருவாக்கும் தவிர கலாசார சீர்கேட்டுக்கான தீர்வு அல்ல.  பொறுப்பில்லாமல் நடந்து கொள்பவர்களை திருத்த முயல வேண்டுமே தவிர, அழிக்க முயல்வது ஆபத்து என்பதை ஊடகங்கள் உணர வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.