தமிழகமெங்கும் சூரிய ஒளி மின்சார பூங்காக்கள் உருவாக்கப்படும் என்ற அறிவிப்பு என்ன ஆனது? - நாராயணன் திருப்பதி

 
narayanan thirupathy narayanan thirupathy

தமிழகமெங்கும் சூரிய ஒளி மின்சார பூங்காக்கள் உருவாக்கப்படும் என்று அறிவிப்பு என்ன ஆனது என திமுக அரசுக்கு பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடனேயே, அதாவது 33 மாதங்களுக்கு முன்னர் தமிழகமெங்கும் சூரிய ஒளி மின்சார பூங்காக்கள் உருவாக்கப்படும் என்று அறிவித்திருந்த நிலையில், இன்று வரை அதற்கான ஒரு முயற்சியும் செய்யப்படவில்லை என்பது இந்த ஆட்சியின் நிர்வாகமின்மையை உணர்த்துகிறது. உண்மையில் தமிழகத்தில் சூரிய ஒளி மின் உற்பத்தியில் கவனம் செலுத்தினால் அதிக அளவு மாற்று எரிசக்தி தமிழகத்திற்கு கிடைக்கும். தனியார் நிறுவனங்கள் பல இந்த திட்டத்தில் ஆர்வம் செலுத்தினாலும் சில மாதங்களுக்கு முன்னர் வரை இதற்கான அனுமதி பெறுவதற்கே லஞ்சமாக ஒரு மெகாவாட்டுக்கு ரூபாய் 20 இலட்சம் செலுத்த வேண்டியிருந்தது என்பது அனைவரும் அறிந்த ரகசியம். ஆனால், தற்போது நிலைமை சற்றே மாறியிருப்பதாக சொல்லப்பட்டாலும், அனுமதி அளிக்கப்பட்ட பின்னர் திட்டத்தை மேற்கொள்ளும் தனியார் நிறுவனங்களுக்கு அழுத்தம் கொடுக்கப்படுவதாக சொல்லப்படுகிறது.


சூரிய ஒளி மின் பூங்காக்களை அமைக்க அரசு எந்த முயற்சியையும், முதலீடுகளையும் மேற்கொள்ள வேண்டிய அவசியமில்லை. தனியாருக்கு தொல்லை தராமல், வெளிப்படையான கொள்கையுடன் அரசு செயல்பட்டாலே போதுமானது.  இந்த திட்டத்தில் முதலீடு செய்பவர்களுக்கு அரசு சலுகைகள் ஏதும் கொடுக்க வேண்டியதில்லை. ஆனால், உரிய நேரத்தில் முறையான அனுமதியை வழங்கி ஊக்குவிக்க வேண்டும். இந்தியாவில் சூரிய ஒளி மின் உற்பத்தியில் தமிழகம் முதல் மாநிலமாக விளங்க அனைத்து வாய்ப்புகள் இருந்தாலும், நிர்வாகமின்மை, ஊழல், லஞ்சம் ஆகியவற்றால் தனியார் நிறுவனங்கள் முதலீடுகளை செய்ய அஞ்சுவதால் பின்தங்கி உள்ளது என்பதே மறுக்க முடியாத உண்மை. இதை புரிந்து கொண்டு மாண்பு மிகு மின்சாரத்துறை அமைச்சரும், மாண்புமிகு முதலமைச்சரும் உரிய நடவடிக்கை எடுப்பது நலம் என குறிப்பிட்டுள்ளார்.