பீகார் சட்டசபையில் நிதிஷ் குமார் பெண்கள் குறித்து பேசியது கடும் கண்டனத்திற்குரியது - நாராயணன் திருப்பதி

 
narayanan thirupathy

பீகார் சட்டசபையில் அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் பெண்கள் குறித்து பேசியது கடும் கண்டனத்திற்குரியது என தமிழக பாஜக துணை தலைவர் நாராயணன் திருப்பதி குறிப்பிட்டுள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பீகார் சட்டசபையில் அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் பெண்கள் குறித்து பேசியது கடும் கண்டனத்திற்குரியது. கேவலமாக  பேசிய நிதிஷ்குமாரை ஆதரிக்கும் அவரின் கூட்டணி கட்சியினர் பதவிக்காக எந்த நிலைக்கும் தரம் தாழ்ந்து செல்வார்கள் என்பதை உணர்த்தியுள்ளது. நிதிஷ் குமார் இனி அரசியலில் நீடிக்கும் தார்மீக உரிமையை இழந்து விட்டார். உடலுறவின் போது என்ன நடக்கும், எப்படி நடக்கும், அதை பெண்கள் எவ்வாறு கையாள வேண்டும் என்று சைகைகளோடு நக்கலாக, சிரித்து கொண்டே சட்டசபையில் பேசிய விவகாரத்தை கண்டிக்காத எந்த கட்சியும் அரசியலில் இருக்க தகுதியற்ற கட்சிகளாகவே கருதப்படும். I.N.D.I கூட்டணியில் உள்ள அனைத்து கட்சி தலைவர்களும் வெட்கி தலைகுனிய வேண்டிய விவகாரம் இது. 


திராவிட முன்னேற்ற கழகம் நிதிஷ் குமார் பேசியதை ஆதரிக்கிறதா? மகளிர் இடஒதுக்கீடு சட்டத்தை பாஜக அரசு கொண்டு வந்துள்ள நிலையில், பெண்களை இழிவாக பேசியுள்ள I.N.D.I கூட்டணியில் உள்ள பீகார் முதல்வர் பதவி விலக வேண்டும் என கோரிக்கை வைப்பாரா மு.க.ஸ்டாலின் அவர்கள்? காங்கிரஸ் கட்சிக்கு உண்மையிலேயே வெட்கம், மானம், சூடு, சொரணை இருந்தால் இனியும் அந்த கூட்டணியில் இருக்குமா? வாய் கிழிய பேசும் கம்யூனிஸ்டுகள் இந்த விவகாரத்தில் வாய் அடைத்து போயுள்ளது ஏன்? ஒட்டு மொத்த பெண் இனத்தையே கேவலப்படுத்தி, மானபங்கப்படுத்திய நபரை கண்டிக்கத்தவர்கள் மக்கள் தலைவர்களா? இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.