"சசிகலாவின் அரசியல் வாழ்க்கையை ஈபிஎஸ் முடித்துவிட்டார்"- நாஞ்சில் சம்பத் பரபரப்பு பேச்சு

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியில் திமுக கிழக்கு மாவட்ட இளைஞரணி சார்பில், இந்தி திணிப்பு, நிதி பகிர்வில் பாரபட்சம், தொகுதி மறு சீரமைப்பில் அநீதி விளைவிக்கின்ற மத்திய அரசை கண்டித்து பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் திமுக பேச்சாளர் நாஞ்சில் சம்பத் கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், “தமிழகத்திற்கு இன்று வருகை தந்த பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு தரவேண்டிய நிலுவை தொகையை விடுவிக்கிறேன் என சொன்னாரா? மோடி தமிழ்நாட்டில் அரசியல் செய்கிறார். ஆனால் திமுக அரசியல் செய்வதில்லை. பாஜக, திமுகவுக்கு எதிரி கிடையாது, ஏனென்றால் பாஜக தமிழ்நாட்டில் உயிரோடு இல்லை, இருப்பதைப் போல் காட்டிக் கொள்கின்றனர்.
தாமரை முளைக்கும், தாமரை மலரும் என கூறுகிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில் தாமரை மலராது. ஏனென்றால் ஏற்கனவே இங்கு தண்ணீர் தட்டுப்பாடு உள்ளது. தாமரை தண்ணீரில் தான் மலரக்கூடிய குணம் கொண்டது. ஆனால் தாமரை இலை மேல் தண்ணீர் ஊற்றினால் அந்த இலை தண்ணீரை நிராகரித்து விடும் , தன்னை தாங்கும் தண்ணீரை நிராகரிக்கும் தாமரையை தமிழக மக்கள் நிராகரிப்பார்கள். ஏற்கனவே பாஜக அரசியல் செய்து அதிமுகவை நான்காக பிரித்து விட்டது. எடப்பாடி பழனிச்சாமி ஒரு இடைத்தரகர், அவர் கால்களை தேடி பயணிக்கிறார். ஒரு ஊர்வனப் போல மேசைக்கடியில் பயணித்து சசிகலா காலில் விழுந்தார். ஆனால் சசிகலா அவரை சரியாக அடையாளம் காணாமல் முதலமைச்சராக்கினார். எடப்பாடி பழனிச்சாமி சசிகலாவுக்கும் விசுவாசமாக இல்லை, சிறைக்கு சென்ற அவரை சித்திரவதை செய்தார். தன்னை உருவாக்கியவரின் அரசியல் வாழ்க்கையையும் முடித்துவிட்டார்” என்றார்.