‘அருள் விக்னேஷ் தவறு செய்திருப்பார் என நம்புகிறேன்’ - நாஞ்சில் சம்பத்
ஆட்சியருக்கே பாதுகாப்பில்லை, சாமானிய மக்களுக்கு எப்படி இருக்கும்? என்ற கேள்வி வந்துவிட்டது.. முதலமைச்சர் விஜய்தான் இதற்கு தீர்வு சொல்ல வேண்டும் என தவெக பரப்புரைச் செயலாளர் நாஞ்சில் சம்பத் கருத்து கூறியுள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜாவுக்கு, தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் வாட்ஸ்அப் மூலம் ஆபாசமான குறுஞ்செய்திகளை அனுப்பியதாகவும், நேரிலும் தகாத முறையில் நடந்துகொண்டதாகவும் ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் செய்திகள் பரவலாக வெளியாகத் தொடங்கின. மாவட்ட ஆட்சியரின் கணவர் ஷேக் அப்துல் ரஹ்மான், எம்எல்ஏ மீது நடவடிக்கை எடுக்கக் கோரி முதல்வர் மற்றும் தலைமைச் செயலருக்குக் கடிதம் எழுதியுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இதனிடையே மாவட்ட ஆட்சியருக்குக் கூடுதல் பாதுகாப்பு வழங்குவதற்காக அண்மையில் ஒரு காவல் துறை அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய நாஞ்சில் சம்பத், "எனக்கு என்னமோ கள்ளக்குறிச்சி எம். எல். ஏ. அருள் விக்னேஷ் இந்தச் செயலை செய்திருப்பார் என நம்புகிறேன். இல்லையென்றால், இவ்வளவு பூதாகரமாக இந்த செய்தி வராது. மாவட்ட ஆட்சியரின் கணவர், தலைமைச் செயலாளரிடம் புகார் அளித்ததாக தகவல் வருகிறது. ஆட்சியருக்கே பாதுகாப்பில்லை, அடித்தட்டு மக்களுக்கு எப்படி இருக்கும் என்ற கேள்வி வந்துவிட்டது. முதலமைச்சர் விஜய்தான் இதற்கு தீர்வு சொல்ல வேண்டும்" என்றார்.

