உடலை ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கே தானமாக வழங்கிய நல்லகண்ணு!
இறந்த பின் தனது உடலை மருத்துவம் பயிலும் மாணவர்களுக்கு உதவிடும் வகையில் அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு தானமாக வழங்குவதாக நல்லகண்ணு உறுதியளித்திருந்தார்.
இந்திய சுதந்திரப் போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான நூற்றாண்டு கண்ட பொதுவுடைமை போராளி ஐயா நல்லகண்ணு உடல்நலக்குறைவால் இயற்கை எய்தினார். திருநெல்வேலி விவசாயக் குடும்பத்தில் பிறந்த நல்லகண்ணு, இந்திய சுதந்திர போராட்டம், விவசாயிகள் போராட்டம், தீண்டாமைக்கு எதிரான போராட்டம், கனிமவளக் கொள்ளைக்கு எதிரான போராட்டம் எனத் தனது வாழ்நாளில் குறிப்பிட்ட பகுதியை போராட்டம், சிறை வாழ்க்கை என வாழ்ந்தவர்
இந்நிலையில், இறந்த பின் தனது உடலை மருத்துவம் பயிலும் மாணவர்களுக்கு உதவிடும் வகையில் அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு தானமாக வழங்குவதாக நல்லகண்ணு உறுதியளித்திருந்தார். அதனடிப்படையில் அவரின் மகள், பேரனிடம் வாரிசு என்ற முறையில் ஒப்புதல் பெறப்பட்டு உடலை பதப்படுத்தும் பணிகள் நடைபெறுகிறது.
இதனிடையே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கொடி அரை கம்பத்தில் பறக்கும். கட்சி அலுவலகத்தில் அஞ்சலிக்காக நல்லகண்ணுவின் உடலை வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மாலை 5.30 மணி முதல் நாளை மாலை 3.30 மணி வரை கட்சி நல்லகண்ணுவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தலாம் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் கூறியுள்ளார்.

