விஜய்க்கு பாஜக நெருக்கடி கொடுக்க வேண்டிய அவசியமில்லை- நயினார் நாகேந்திரன்
விஜய்க்கு பாஜக நெருக்கடி கொடுக்க வேண்டிய அவசியமில்லை பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டியளித்துள்ளார்.

மதுரையில் ஜன.23 அன்று பிரதமர் மோடி மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கும் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெறவுள்ள பாண்டிகோவில் சுற்றுச்சாலை திடலில் முன்னேற்பாடு பணிகள் குறித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மூத்த நிர்வாகிகள் பொன்.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா உள்ளிட்டோர் கூட்டாக ஆய்வு செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறுகையில் "மதுரையில் ஜனவரி 23 ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணியின் அரசியல் பொதுக் கூட்டம் நடைபெறுகிறது. பொதுக் கூட்டத்தில் தேமுதிக பங்கேற்குமா? என்பது இனிமேல் தான் முடிவு செய்யப்படும். தேசிய ஜனநாயக கூட்டணியில் யார் யார் இடம் பெறுகிறார்கள் என்பதை இ.பி.எஸ், பியூஸ் கோயல், அமித்ஷா மட்டுமே முடிவு செய்வார்கள். அன்புமணி ராமதாஸ் உடன் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது, இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இராமதாஸ் தேர்தல் ஆணைத்தில் புகார் அளித்தது அக்கட்சியின் உட்கட்சி பிரச்சினை, அதில் பாஜக கருத்து சொல்லாது. தேர்தலையோட்டி விஜயிடம் சிபிஐ விசாரணை நடத்தவில்லை, தவறான தகவல் பரப்பப்பட்டு வருகின்றது. பாஜக விஜய்க்கு நெருக்கடி கொடுக்க வேண்டிய அவசியமில்லை, விஜய் ஒரு கட்சி நடத்துகிறார், நாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணி அமைத்து தேரதலை சந்திக்க உள்ளோம். நான் பராசக்தி படம் பார்க்கவில்லை, பழைய ஒரிஜினல் பராசக்தி படம் பார்த்துள்ளேன், காங்கிரஸ் அந்த படத்திற்கு சென்சார் கொடுத்தது. மஹாராஸ்டிரா தேர்தல் பிரச்சாரத்தில் அண்ணாமலை உள்நோக்கத்துடன் பேசவில்லை, காங்கிரஸ் கட்சி ஆட்சியில் பங்கு கேட்பது அவர்களின் விருப்பம், அதையே பாஜகவிடம் எதிர்பார்க்க கூடாது. தமிழகத்தில் இருந்து திமுக அகற்றப்பட வேண்டும் என்பதற்காக தேசிய ஜனநாயக கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது. 56 தொகுதி, 3 அமைச்சர் பதவி பாஜக கேட்பதாக வரும் செய்திகள் வதந்தி" என பேசினார்.


