மலேசியாவில் தமிழ் கலாச்சாரத்திற்குப் புகழாரம்: பிரதமர் மோடிக்கு நயினார் நாகேந்திரன் பாராட்டு!

 
1 1

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்  வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘மலேசியாவில் தமிழ் மரபைப் போற்றிய நமது பிரதமருக்கு நன்றி. உலகமெங்கும் தமிழின் பெருமையைப் பறைசாற்றி வரும் நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, அரசு முறைப் பயணமாக மலேசியா சென்றுள்ள நிலையில், அங்கும் தமிழ்க் கலாச்சாரத்திற்குப் புகழாரம் சூட்டியிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.

அதிலும், தமிழ்க் கலாச்சாரம் உலகமயமானது என்று போற்றியதோடு, தமிழ் தான் உலக நாடுகளுடன் இந்தியாவை இணைக்கிறது என்று பெருமிதத்துடன் கூறியிருப்பது மகிழ்ச்சியை இரட்டிப்பாக்குகிறது. தமிழ் இலக்கியத்தின் அழியாப் பெருமையைச் சுட்டிக்காட்டி, மலேசியாவில் திருவள்ளுவர் கலாச்சார மையம் விரைவில் அமைக்கவிருப்பதையும் குறிப்பிட்டிருப்பது வரவேற்பிற்குரியது.

குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை இணையமைச்சர் எல். முருகன் என நமது தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைமையிலான மத்திய அரசின் முக்கிய அங்கங்களாக இருக்கும் அனைவரும் தமிழர்களே என்பதையும் குறிப்பிட்டார்.

இவ்வாறு உள்நாட்டில் தமிழர்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதோடு, கடல் கடந்து சென்று தமிழின் பெருமையையும் தமிழர்களின் பெருமையையும் போற்றி வரும் நமது பிரதமருக்குத் தமிழக மக்கள் சார்பாக நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.