தமிழ்நாடு அரசை கலைக்க வேண்டும்- ஆளுநரை சந்தித்து நயினார் நாகேந்திரன் மனு
சென்னை மக்கள் மாளிகையில் தமிழ்நாடு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை இன்று நேரில் சந்தித்து மனு அளித்தார் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன்.
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், "தமிழ்நாட்டில் கடந்த 7 மாதங்களில் 620 கொலைகள் நடந்துள்ளன. ஆபாச குறுஞ்செய்தி விவகாரத்தில் 3 மாதங்களாக எப்.ஐ.ஆர். கூட போடாதவர்கள் எப்படி நடவடிக்கை எடுப்பார்கள்? தவெக ஆட்சியில் இருக்கும்வரை தமிழ்நாடு காவல்துறை மீது நம்பிக்கை இருக்காது. திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவை தமிழ்நாடு அரசு நிறைவேற்றவில்லை. அரசமைப்புச் சட்ட கடமையை மாநில அரசு செய்யவில்லை என்பதால் கலைக்க வேண்டும். அன்று திமுக திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றவில்லை அதனால் இன்று ஆளுங்கட்சியாக இல்லை. அதே போல இந்த முறை தவெகவும் தீபம் ஏற்றவில்லை..எதிர்காலத்தில் தவெக ஆளும்கட்சியாக இருக்காது
கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீதான புகாரில் மூன்று மாதங்களாக வழக்கு பதிவு செய்யாததால், தமிழக காவல்துறை மீது நம்பிக்கை இல்லை. திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவை மதிக்காமல், இந்துக்களின் மத உணர்வுகளை புண்படுத்திய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க ஆளுநரிடம் மனு அளித்துள்ளோம். உச்சநீதிமன்ற உத்தரவை தமிழ்நாடு அரசு மதிக்கவில்லை..நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆளுநரிடம் மனு அளித்துள்ளோம்..ஆளுநர் விசாரிப்பதாக கூறியிருக்கிறார்" என்றார்.

