தவெகவினர் நடத்தும் அட்டூழியங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்- நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்..!!
பாஜகவின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிடுள்ள அறிக்கையில், “ஆய்வு” என்ற பெயரில், விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள அரசுப் பள்ளிக்கு கேமராக்களுடன் சென்று, அங்குள்ள குழந்தைகளுக்கு ஆங்கிலம் தெரியவில்லை என்பதைக் குத்திக்காட்டி, மாணவர்கள் முன்னிலையிலேயே அங்குள்ள ஆசிரியர்களின் கற்பித்தல் திறனைக் குறைக் கூறி, “Last Bench” மாணவர்களுக்கு எதுவும் தெரியாது என்று லேபிள் ஒட்டிய தொழில்துறை அமைச்சர் கீர்த்தனாவின் ஆணவம் கடும் கண்டனத்திற்குரியது.
நேர்காணல் நடத்தும் ஸ்ட்ரிக்ட் கார்ப்பரேட் முதலாளி போல, படிக்கும் பிள்ளைகளிடம் துருவித் துருவி கேள்விகள் கேட்டு அவர்களைத் திணற வைப்பதற்கும், அங்குள்ள ஆசிரியர்களைக் குற்றவாளி கூண்டில் நிறுத்தி மகிழ்வதற்கும் பெயர் “ஆய்வு” கிடையாது, “அராஜகம்”. செல்லுமிடமெல்லாம் அதிகாரிகளை விட, கேமராமேன்களைக் கையோடு அழைத்துச் செல்லும் தவெக அமைச்சர்கள், “ஆய்வு செய்வது எப்படி” என்பது குறித்த அடிப்படையை தெரிந்து கொள்வது அவசியம். அதைவிட்டு விட்டு படிக்கும் பிள்ளைகளிடம் இப்படி தாழ்வு மனப்பான்மையை விதைக்க முயலக் கூடாது.
எனவே, முதலமைச்சர் விஜய், களப்பணியில் அனுபவமற்ற தனது அமைச்சர்களுக்கு ஆய்வு செய்வதற்கான முறையான வழிமுறைகளை அறிவுறுத்த வேண்டும்! மேலும், தன்னைக் கற்றறிந்த ஞானி போல காட்டிக் கொள்வதற்காக அரசுப் பள்ளியில் படிக்கும் பிள்ளைகளை பகடைக்காய்களாகப் பயன்படுத்தி, அதை கேமராவில் பதிவு செய்து வெளியிட்ட அமைச்சர் கீர்த்தனா மீது முதலமைச்சர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்!" என்று வலியுறுத்தியுள்ளார்.
இதனிடையே, தன் மீதான இதுபோன்ற விமர்சனத்திற்கு அமைச்சர் கீர்த்தனா பதிலளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், 'நான் சிவகாசி அரசுப் பள்ளிக்குச் சென்றது அரசியல் செய்வதற்காக அல்ல. அது என் தொகுதி! அந்த மாணவர்களின் குரலைச் சம்பந்தப்பட்ட அமைச்சரிடம் கொண்டு சேர்ப்பது என் உரிமையும், என் கடமையுமாகும்.
நான் 1-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை தமிழ்வழிக் கல்வியில் படித்தவள். இன்று அந்தக் குழந்தைகளில் ஒருத்தியாகவே என்னைப் பார்க்கிறேன். உயர்கல்விக்கும், கார்ப்பரேட் உலகிற்கும் நான் சென்றபோது, அரசுப் பள்ளியில் படித்துவிட்டு வரும் மாணவர்கள் எதிர்கொள்ளும் சவால்களை நானே நேரடியாக அனுபவித்திருக்கிறேன். அதனால்தான், இந்த மாணவர்களின் எதிர்காலம் எனக்கு அரசியலைவிட மிக முக்கியமானது!
தமிழ்நாட்டின் எதிர்காலம் இந்த மாணவர்களின் கைகளில்தான் இருக்கிறது. அவர்களுக்கு அடிப்படை வசதிகள்கூட இல்லாமல் விட்டுவிட்டு, உண்மையைச் சொல்பவர்களைக் குறை கூறுவது தீர்வாகாது.' என்று தெரிவித்துள்ளார்.

