தமிழக அரசின் முடிவுக்கு நாகூர் தர்கா நிர்வாகம் எதிர்ப்பு..!

 
1

பிரசித்தி பெற்ற நாகூர் ஆண்டவர் கந்தூரி விழாவிற்காக அரசு சார்பில் வழங்கப்பட்டுவரும் சந்தன கட்டைகளை, நிர்வாகம் சாராத தனி நபரிடம் வழங்க திட்டமிட்ட தமிழக அரசின் முடிவுக்கு தர்கா நிர்வாகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வழக்கமாக முதலமைச்சரே நேரில் தர்கா நிர்வாகத்திடம் சந்தன கட்டைகளை வழங்குவது பாரம்பரியமாக நடைமுறையில் உள்ள நிலையில், இம்முறை அரசியல் தலையீடு காரணமாக முறையான நிர்வாகத்திடம் வழங்க ஏற்பாடு செய்யாததை கண்டித்து அதை பெற்றுக்கொள்ள மறுப்பதாக தர்கா கமிட்டியினர் அறிவித்துள்ளனர்.

நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரில் உள்ள நாகூர் ஆண்டவர் தர்கா, இஸ்லாமியர்கள் மட்டுமின்றி இந்துக்களும் வழிபடும் புகழ்பெற்ற இடமாகும். இங்கு அடக்கம் செய்யப்பட்டுள்ள சாகுல் ஹமீது ஆண்டவரின் நினைவாக ஆண்டுதோறும் கந்தூரி விழா நடைபெறுகிறது.இந்த ஆண்டு 470-வது கந்தூரி விழா நவம்பர் 10-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு ஊர்வலத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பார்கள். ஊர்வலமாகக் கொண்டுவரப்படும் சந்தனம் நாகூர் ஆண்டவர் சமாதியில் பூசப்படும்.

நாகூர் தர்காவின் கந்தூரி விழாவுக்காக தமிழக அரசு ஆண்டுதோறும் சந்தனக்கட்டைகளை இலவசமாக வழங்கி வருகிறது. இதற்கான அரசாணையை முதல்வரிடம் இருந்து தர்கா நிர்வாகிகள் பெற்றுக்கொள்வது வழக்கம்.

2012-ம் ஆண்டு முதல் இந்த நடைமுறை தொடர்ந்து வருகிறது. இடையில் தர்கா நிர்வாகத்தில் மாற்றங்கள் ஏற்பட்டபோதும், அப்போது நிர்வாகப் பொறுப்பில் இருந்தவர்களிடமே அரசாணை வழங்கப்பட்டது.

2022-ம் ஆண்டு நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு தர்காவின் பரம்பரை நிர்வாகிகள் மீண்டும் பொறுப்பேற்றனர். அதன்பின்னர் தலைமை அறங்காவலர் உள்ளிட்ட நிர்வாகிகளிடம் முதல்வர் அரசாணையை வழங்கி வந்தார்.

இந்த ஆண்டு அக்டோபர் 22-ந் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய் சந்தனக்கட்டைகளுக்கான அரசாணையை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஆனால் இந்த முறை தர்காவின் வழக்கமான நிர்வாகிகளுடன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியைச் சேர்ந்த ஒருவரையும் சேர்த்து அரசாணையை வழங்க முயற்சி நடப்பதாக தர்கா நிர்வாகிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

அந்த நபர் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாஜகானின் ஆதரவாளர் என்றும், அவரையும் அழைத்து வர வேண்டும் என்று வலியுறுத்தப்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது.

இதனால் வழக்கமாக தர்கா நிர்வாகிகளிடம் வழங்கப்படும் அரசாணையை, அரசியல் கட்சியைச் சேர்ந்த ஒருவருடன் சேர்ந்து பெற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது.