தனது பாதுகாவலர் தள்ளிவிட்ட ரசிகரை சந்தித்து மன்னிப்பு கூறிய நாகர்ஜூனா

 
நாகர்ஜூனா

தனது பாதுகாவலர் தள்ளிவிட்ட முதியவரை சந்தித்து நடிகர் நாகர்ஜூனா மன்னிப்பு தெரிவித்தார்.

தெலுங்கு சினிமாவின் பழம்பெரும் நடிகர் நாகேஷ்வர் ராவின் மகன் நாகர்ஜூனா. தெலுங்கு மொழி மட்டுமின்றி, தமிழ் உள்ளிட்ட மற்ற மொழி படங்களிலும் நடித்துவரும் இவர், படப்பிடிப்புக்காக மும்பை சென்றுவிட்டு ஹைதராபாத் திரும்பியுள்ளார். நாகர்ஜூனா, தனுஷ், மற்றும் அவரது மகன் என மூவரும் ஒரே நேரத்தில் ஹைதராபாத் விமான நிலையத்திற்கு வந்தனர். அப்போது நாகர்ஜூனாவின் வயதான ரசிகர் ஒருவர் அவரை தொட்டு பேச முயன்ற போது, நாகர்ஜூனாவின் பாதுகாவலர்கள் அந்த ரசிகர்களை தள்ளிவிட்டனர். இதனால் கீழே விழப்போன அவரை அருகில் இருந்தவர்கள் தாங்கிப் பிடித்தனர். ஆனால் நாகர்ஜூனா அதைபற்றி சிறிதும் கவலைப்படாமல் அங்கிருந்து சென்றுவிட்டார். அவருக்கு அடுத்து வந்த நடிகர் தனுஷூம் முதியவரை கண்டுகொள்ளவில்லை. 


இது குறித்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், நாகர்ஜூனாவின் செயலுக்கு பலரும் கண்டனங்களை தெரிவித்திருந்தனர். இதுகுறித்து தெரிந்துகொண்ட நாகர்ஜூனா தற்போது தனது செயலுக்கு மன்னிப்பு கோரினார். அதுமட்டுமின்றி, தனது பாதுகாவலர் தள்ளிவிட்ட முதியவரை அழைத்து நேரில் சந்தித்து மன்னிப்பு கோரினார். இதுபோன்ற சம்பவம் நடந்திருக்க கூடாது, இனி வரும் காலங்களில் நடக்காது என்றும் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.