நடிகர் சங்க பொதுக்குழுவில் ஸ்டாலின், உதயநிதி, ரஜினிக்கு நன்றி தெரிவித்து தீர்மானம்
திரைத்துறைக்கு நன்மை செய்து வரும் முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதிக்கு நன்றி தெரிவித்து நடிகர் சங்க பொதுக்குழுவில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

சென்னையில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 69வது பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. நடிகர் சங்க உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவி தொகை வழங்கிய நடிகர் ரஜினிக்கு பொதுக்குழுவில் நன்றி தெரிவிக்கப்பட்டது. அதேபோல் திரைத்துறைக்கு நன்மை செய்து வரும் முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதிக்கு நன்றி தெரிவித்து நடிகர் சங்க பொதுக்குழுவில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. நடிகர் சங்க உறுப்பினர்கள் குறித்து அவதூறு பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நடிகர் சங்க ஆண்டறிக்கை, வரவு-செலவு அறிக்கைக்கு ஒப்புதல், சட்ட ஆலோசகராக கிருஷ்ணா ரவீந்திரன் நியமனம் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்ட மோகன் லாலுக்கு நடிகர் சங்க தலைவர் நாசர் வாழ்த்து தெரிவித்தார். கூட்டத்தில், இந்தாண்டு மறைந்த நடிகர்கள் போட்டோ அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அதில் சமீபத்தில் மறைந்த ரோபோ சங்கர் போட்டோவும் இடம் பெற்றுள்ளது.
இதனிடையே கூட்டத்தில் பேசிய நடிகர் கார்த்தி, “நடிகர் சங்க கட்டடத்திற்கு ரூ.40 கோடிக்கு மேல் செலவாகியுள்ளது, ரூ.25 கோடி கடன் வாங்கியுள்ளோம். அட்டடத்தை எப்படி முடிக்க போகிறோம் என பயம் இருந்தது, எதிர்பார்க்காத இடத்திலிருந்து பணம் வந்து கொண்டிருக்கிறது” என்றார்.

