“ரூ.5000 கொடுத்து அடுத்த 5 ஆண்டுகள் தமிழ்நாட்டைக் கொள்ளையடிக்க திமுக துடிக்கிறது”- சீமான்
5000 ரூபாய் கொடுத்து அடுத்த 5 ஆண்டுகள் தமிழ்நாட்டைக் கொள்ளையடிக்கத் துடிக்கிறது திமுக அரசு பணத்தைக் கொடுத்து வாக்கைப் பறிக்க முனையும் திமுகவின் திருட்டுத்தனத்திற்கு வரும் தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மகளிர் உரிமைத்தொகை என்ற பெயரில் எந்த மாதமும் இல்லாமல், திடீரென்று இன்று 5000 ரூபாயை முன்பணமாக வங்கிக் கணக்கில் வரவு வைத்துள்ளது திமுக அரசு. மக்களின் வரிப்பணம்தான் மீண்டும் மக்களுக்கே வழங்கப்படுகிறது என்றாலும் கடந்த 4 ஆண்டுகளாக இல்லாத வகையில் இந்த ஆண்டு மட்டும் 3 மாத முன்பணம், கோடைகால முன்பணம் என்றெல்லாம் வழங்குவது, தேர்தல் வருவதைக் கணக்கிட்டு மக்களின் வாக்கைப் பறிக்கும் சூழ்ச்சியாகும். கடந்த 2021ஆம் ஆண்டு சட்டமன்றத்தேர்தல் அறிக்கையில், ஆட்சிக்கு வந்தவுடன் அனைத்து பெண்களுக்கும் 1000 ரூபாய் தருவோம் என்று தேர்தல் வாக்குறுதி அளித்த திமுக, முதல் இரண்டரை ஆண்டுகள் அதனைத் தராமல் ஏமாற்றியது. முதல் 30 மாதங்களுக்குத் தரவேண்டிய 30 ஆயிரம் ரூபாயை ஏமாற்றிவிட்டு, தற்போது தேர்தல் வருவதை முன்னிட்டு வெறும் 2000 ரூபாயை மட்டும் கூடுதலாகக் கொடுத்துவிட்டு, மீதமுள்ள 28,000 ரூபாயை ஏமாற்ற நினைப்பது மக்களை முட்டாளுக்கும் இழிசெயலாகும். அதுமட்டுமின்றி, அனைத்து பெண்களுக்கும் உரிமைத்தொகை என்று தேர்தல் அறிக்கையில் கூறிய திமுக, பின்னர் தகுதியுள்ள பெண்களுக்கு மட்டுமே தருவோம் என்று சுருக்கி, இன்றுவரை பல்லாயிரம் பெண்களுக்குத் தராமலும் ஏமாற்றி வருகிறது.
இந்த ஆண்டு பொங்கல் பரிசுத்தொகை, கோடைக்காலச் சிறப்புத்தொகை அனைத்தையும் வழங்கும் திமுக அரசு, இதையெல்லாம் சென்ற ஆண்டு வழங்காதது ஏன்? இந்த ஆண்டுதான் மக்களின் துன்பம் திமுக அரசின் கண்களுக்குத் தெரிகிறதா? தேர்தல் வரும்போதுதான் மக்களின் வேதனைக்குரல் திமுக அரசின் காதில் விழுகிறதா? கடந்த 2001 முதல் 2021 வரை தமிழ்நாட்டை மாறி மாறி ஆண்ட திமுக - அதிமுக அரசுகள் வாங்கிய தமிழ்நாட்டின் மொத்த கடன் 5 இலட்சம் கோடியாகும். ஆனால், கடந்த 5 ஆண்டுகால திமுக அரசு, தன்னுடைய மிக மோசமான நிர்வாகத்தால், மேலும் 5 இலட்சம் கோடி கடன் வாங்கி தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை அதலபாதாளத்தில் தள்ளியுள்ளது. தமிழ்நாட்டு மக்களின் தலையில் 10 இலட்சம் கோடிகள் கடனை சுமத்திவிட்டு, தற்போது ஒரே நாளில் மேலும் 6,500 கோடி கடன் சுமையை ஏற்றியுள்ளது நிர்வாகத்திறனற்ற திமுக அரசு.
நீண்ட நாட்களாகத் திட்டமிட்டு, மிகவும் ரகசியம் காத்து ஒரே நாளில் 1.31 கோடி வங்கிக்கணக்குகளில் 5000 ரூபாய் செலுத்துவதில் மிகவும் நேர்த்தியாகச் செயல்பட்ட திமுக அரசு, இத்தனை கவனத்தையும், பொறுப்பையும் சட்டம் ஒழுங்கை காப்பதில் ஏன் காட்டவில்லை? இளைஞர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் அரசுப்பணி தேர்வுகளைச் சரியாக நடத்துவதில் இத்தனை பொறுப்புடன் திமுக அரசு செயல்படாதது ஏன்? நாள்தோறும் நடைபெறும் படுகொலைகளையும், பாலியல் வன்கொடுமைகளையும் தடுப்பதில் இத்தனை வேகமாகச் செயல்படாதது ஏன்? பல்கிப் பெருகியுள்ள போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் இத்தனை வேகமாகச் செயல்படாதது ஏன்? சாதிய ஆணவப்படுகொலைக்கு எதிரான சட்டம் இயற்றுவதிலும், இசுலாமிய சிறைவாசிகளை விடுதலை செய்வதிலும் இத்தனை வேகத்தை காட்டாதது ஏன்? தமிழ்நாடு முழுவதும் வீதிக்கு வீதி ஆசிரியர் பெருமக்கள், அரசு மருத்துவர்கள், ஊரகத் திட்டப் பணியாளர்கள், ஊராட்சி செயலர்கள், அரசுக் கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள், உதவிப் பேராசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், டாஸ்மாக் ஊழியர்கள், கிராம சுகாதாரப் பணியாளர்கள், மாற்றுத்திறனாளிகள், நூலகர்கள், ஊர்க்காவல்படையினர் என அனைத்து தரப்பினரும் தங்களின் பணிப்பாதுகாப்பிற்கும், ஊதிய உயர்விற்கும் அன்றாடம் போராடி வருகின்றனர். நிதிநிலையைக் காரணம் காட்டி அதனையெல்லாம் நிறைவேற்ற மறுக்கும் திமுக அரசு, தேர்தலை முன்னிட்டு ஒரே நாளில் 6,500 கோடி ரூபாயை வாரியிறைக்க மட்டும் எங்கிருந்து நிதி வந்தது? இப்போது மட்டும் நிதி சிக்கல் இல்லாமல் போனது எப்படி? மக்களின் நன்மை குறித்த எந்தச் சிந்தனையும் இன்றி, வெறும் வாக்கு வங்கியை மட்டும் குறிவைத்துச் செயல்படும் திமுக அரசின் இத்தகைய தேர்தல்கால நாடகங்கள் வெட்கக்கேடானது.

தமிழ்நாடு அரசின் தற்போதைய மொத்த கடன்சுமை 9.30 இலட்சம் கோடிகளாகும். தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இக்கடன் சுமை 26% ஆகும். ஒவ்வொரு ஆண்டும் மொத்த வருவாயில் 56,000 கோடி ரூபாயை (21%) வாங்கிய கடனுக்கு வட்டியாகவே தமிழ்நாடு அரசு செலவிடுகிறது. நடப்பு 2025-26 நிதியாண்டில், மேலும் 1,62,000 கோடி ரூபாய் கடன் வாங்கவும் திட்டமிட்டுள்ளது. தமிழ்நாடு நிதிப்பொறுப்புச் சட்டத்தின்படி 3%-க்குள் இருக்க வேண்டிய நிதிப்பற்றாக்குறை, திமுக அரசின் நிர்வாகச் சீர்கேட்டால் கடந்த 2023-24 நிதியாண்டில் வரம்பை கடந்து 90,430 கோடியாக (3.32%) அதிகரித்தது. அதுமட்டுமின்றி, 2022-23 நிதியாண்டில் 36,215 கோடியாக இருந்த தமிழ்நாடு அரசின் வருவாய் பற்றாக்குறை, 2023-24 நிதியாண்டில் 45,121 கோடியாகவும் உயர்ந்துள்ளது. ஏற்கனவே, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு வழங்க வேண்டிய பல்லாயிரம் கோடி நிதியை, திமுக அரசு முறைகேடாக உரிமைத்தொகை வழங்கச் செலவிட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதுமட்டுமின்றி, திமுக அரசு கடனாக வாங்கும் பல இலட்சக்கணக்கான கோடிகளை மாநிலத்தின் உட்கட்டமைப்பை மேம்படுத்தும் வளர்ச்சித் திட்டங்களில் பயன்படுத்தாமல், தொலைநோக்கு இல்லாத வெற்றுக் கவர்ச்சித் திட்டங்களில் வீணடிப்பதாக இந்தியத் தலைமை கணக்கு அறிக்கையும் சுட்டிக்காட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.
உபரி நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) தாக்கல் செய்யும் நல்ல அரசுகூட, இத்தனை கோடிகளை ஒரே நாளில் வீணடிக்காது. ஆனால், பற்றாக்குறை நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யும் திமுக அரசு, வாங்கிய கடனுக்கு வட்டி கட்டவே, மேலும் பல்லாயிரம் கோடிகளைக் கடனாக வாங்கும் மோசமான நிலையில் தமிழ்நாட்டை வைத்துள்ள திமுக அரசு இப்படி 6,500 கோடி ரூபாயை எந்தத் தொலைநோக்கு சிந்தனையும் இல்லாமல் ஒரே நாளில் வாரியிறைப்பது, மக்களை ஏமாற்றி அடுத்த அடுத்த 5 ஆண்டுகள் தமிழ்நாட்டைக் கொள்ளையடிப்பதற்குச் செய்கின்ற அப்பட்டமான சூழ்ச்சியேயாகும். கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலின்போது ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டு மாணவர்களின் கல்விக்கடனை முழுமையாக இரத்து செய்வோம் என்று கொடுத்த வாக்குறுதியை இன்றுவரை நிறைவேற்றாமல், பல இலட்சக்கணக்கான மாணவர்களை ஏமாற்றி வரும் திமுக அரசு, தற்போது தேர்தல் வருவதை முன்னிட்டு 5000 ரூபாய் பணத்தைக் கொடுத்து, மக்களை ஏமாற்றி வாக்கைப் பறிக்க முனையும் திருட்டுத்தனத்திற்கு வரும் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.

