“கழிவறையை சுத்தம் செய்ய தெரியாதவர்களிடத்திலும் நாட்டை கொடுத்தால் நாற்றமாகத்தான் இருக்கும்”- சீமான்
நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை சார்பில் "சொந்த நிலத்தில் அகதியாகும் தமிழர்கள் என்ற பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது.

இதில் கலந்துகொண்டு பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “தனிப்பெரும் முதலாளிகளின் வளர்ச்சியை நாட்டின் வளர்ச்சி என கட்டமைக்கிறார்கள். அதுவல்ல வளர்ச்சி. அனைவருக்கும் தரமான சமமான இலவசக் கல்வி மற்றும் இலவச மருத்துவத்தை கொடுக்கும் நோக்கில் அரசு செயல்பட்டால் அது வளர்ச்சியை நோக்கிய பயணம். ஒரு கிலோ குப்பையை அள்ள 12 ரூபாய், ஒரு கழிவறையை சுத்தம் செய்ய 350 ரூ பாய். இது அரசு தனியார் நிறுவனத்திற்கு கொடுக்கும் தொகை. கழிவறையை சுத்தம் செய்யத் தெரியாதவர்களிடத்திலும் குப்பையை அள்ளத் தெரியாதவர்களிடத்திலும் நாட்டைக் கொடுத்தால் நாடு குப்பை மேடாகவும் கழிவறை போல் நாற்றமாகத்தான் இருக்கும்.
வளர்ச்சி என்று சொல்லி ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை நம்மிடம் இருந்து பிடுங்கி வாழ்விடங்களில் இருந்து அகற்றி விடுவார்கள். அதில் உள்ள வளங்களையும் எடுத்துக் கொள்வார்கள், வேலை வாய்ப்பையும் தரமாட்டார்கள். காரணம் இந்திய , திராவிட அதிகாரம் தமிழுக்கும் தமிழர்களுக்கும் எதிரானது. நிலமும் , அதன் வளமும் அதை சார்ந்த தொழிலும் இதுதான் நாம் தமிழர் கட்சியின் வேலை வாய்ப்பு கொள்கை. பரந்தூர் ஏர்போர்ட் கட்டுவதற்கான நிலமல்ல! ஏர் பூட்டி உழுகிற நிலம்!” என்றார்.

