“ரேசன் கடைகளில் காய்கறிகள் விற்கப்படும், விவசாயத்தை அரசு பணியாக அறிவிக்கப்படும்”- சீமான்

 
சீமான்

நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்ததும் டாஸ்மாக் கடைகள் மூடப்படும், பணங்கள் தென்னங்கள் விற்பனை செய்யப்படும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.

சீமான்

கும்பகோணம் மற்றும் திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து இன்று மாலை கும்பகோணம் காந்தி பூங்கா முன்பு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் நடிகர் சீமான் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய சீமான், “நாட்டில் உள்ள அனைத்து நச்சு திட்டங்களையும் அமுல்படுத்தியது பாரதிய ஜனதா கட்சியும் காங்கிரசும் தான். இந்த இருவரில் திமுக ஒருவரையும் அதிமுக ஒருவரையும் தாங்கிக் கொண்டு வருகின்றனர். இந்த தேர்தலில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வர வேண்டும் திமுக, அதிமுக என மாறி மாறி ஆட்சிக்கு வருகின்றன. ஆனால் காட்சிகள் மாறவில்லை. நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்ததும் கல்வி, மருத்துவம், குடிநீர் ஆகிய மூன்றும் முற்றிலும் இலவசமாக வழங்கப்படும். எந்த ஒரு திட்டமங்களும் இலவச திட்டங்கள் ஆக இருக்காது. டாஸ்மாக் கடைகள் மூடப்படும். அதே நேரத்தில் பணங்கள், தென்ன மரத்துகள் ஆகியவை விற்பனை செய்யப்படும்.

பால் உற்பத்தியை பெருக்க திட்டங்கள் கொண்டுவரப்படும். கழுதை பால் ஒரு லிட்டர் 6 ஆயிரம் ரூபாய் வரை விற்கிறது, அதற்கு தேவை அதிகம் உள்ளது. ஆடு, மாடு, கழுதை போன்றவைகளை மேய்ப்பதற்கு முக்கியத்துவம் தரப்படும். ரேஷன் கடைகளில் தரமான காய்கறிகள் விற்கப்படும். விவசாயத்தை அரசு பணியாக அறிவிக்கப்படும். தமிழகத்தின் அனைத்து தெருக்களிலும்  வீதிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும். குற்றம் செய்பவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள். கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு 10 லட்ச ரூபாய் நிவாரணம் கொடுத்தது. நடிகரை பார்க்க வந்து அதில் இறந்தவர்களுக்கு நிவாரணமாக 10 லட்ச ரூபாய் கொடுத்ததும் தேவையில்லாதது. நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்ததும் கும்பகோணத்தை தலைமை இடமாக கொண்டு புதிய மாவட்டம் அமைக்கப்படும்” என்றார்.