ஈரோட்டில் நாதக- தபெதிக இடையே மோதல்!

வரும் 5.ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்கு தொகுதியில் நாளை மாலையுடன் பிரச்சாரம் ஓய உள்ள நிலையில் பிரச்சாரம் இறுதிக் கட்டத்தை எட்டி உள்ளது.
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி மற்றும் அக்கட்சியினர் ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் சிஎஸ்ஐ தேவாலயத்திற்கு முன்பாக பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். அப்போது விதிமுறைகளை மீறி வேட்பாளர் சீதாலட்சுமி தேவாலயத்திற்குள் சென்று துண்டு பிரசுரங்களை விநியோகித்தார். அப்போது அங்கு தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த பறக்கும் படை அதிகாரிகள் வேட்பாளரை எச்சரித்து வெளியே அனுப்பினார். மேலும் போலீசாரும் அவர்களை தேவாலயத்திற்கு வெளியே நின்று வாக்கு சேகரிக்குமாறு எச்சரித்தனர்.
இந்த நிலையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் தேவாலயத்திலிருந்து வெளியில் வரக்கூடிய கிறித்துவ மக்களிடம் துண்டு பிரசுரங்களை விநியோகித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். ‘மண் அல்ல பெரியார் ஈரோட்டு மன்னர்’ என்ற தலைப்பில் தந்தை பெரியாரால் ஈரோடு அடைந்த பயன்கள் குறித்த துண்டறிக்கையை விநியோகித்தனர். ஈரோடு அரசு மருத்துவமனை பெரியாரால் கட்டப்பட்டது, 100 ஆண்டுகளுக்கு முன்பாக குடிநீர் தொட்டி அமைத்து, வீடுகளுக்கு குடிநீர் இணைப்பை அமைத்துக் கொடுத்தது, சிக்கைய நாயக்கர் கல்லூரி, வேளாளர் மகளிர் கல்லூரி மற்றும் நகர் மன்ற தலைவராக இருந்து பெரியார் ஆற்றிய பணிகள் குறித்து துண்டு பிரசுரத்தில் இடம்பெற்று இருந்தன. தமிழ்நாட்டின் அடையாளமாக திகழும் தந்தை பெரியாரை ஆணவத்துடன் பேசுபவர்களை புறக்கணிப்போம் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்த துண்டு பிரசுரத்தை விநியோகிக்க நாம் தமிழர் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்ததால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. போலீசார் அவர்களை சமாதானப்படுத்தினர். இந்நிலையில் சாலையின் மறுபுறம் தபெதிகவினர் நின்று கொண்டிருந்தபோது நாம் தமிழர் கட்சியினர் மீண்டும் அங்கு சென்று தகராறில் ஈடுபட்டனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து இருதரப்பினரையும் தனித்தனியாக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. பாதுகாப்புக்காக கூடுதல் போலீசார் நிறுத்தப்பட்டனர்.