நாதக நிர்வாகி கொலைக்கு இதுவே காரணம்! மதுரை போலீஸ் பரபரப்பு விளக்கம்

மதுரையில் நாம்தமிழர் கட்சி பிரமுகர் கொலை செய்யப்பட்ட வழக்கில் நால்வர் கைது செய்யப்பட்ட நிலையில், சொத்து பங்கீடு மற்றும் குடும்ப பிரச்சனையே கொலைக்கு காரணம் என காவல்துறை தெரிவித்துள்ளது.
மதுரை செல்லூரை சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் வடக்கு தொகுதி துணைச்செயலாளர் பாலமுருகன் (50) இன்று (ஜூலை 16) காலை அமைச்சர் பி.டி.ஆர். வீடு அமைந்துள்ள வல்லபாய் சாலை பகுதியில் நடைபயிற்சி சென்ற போது வெட்டிப்படுகொலை செய்யப்பட்டார். குடும்ப பிரச்சனை மற்றும் சொத்து பங்கீட்டில் இருந்து வந்த முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடைபெற்றுள்ளதாக மதுரை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது. பாலமுருகனின் தம்பி பாண்டியராஜனுக்கும் அவரது உறவினர் மகாலிங்கத்திற்கும் இருந்து வந்த சொத்துப்பங்கீடு விவகாரத்தில் பாலமுருகன் தலையிட்டு சொத்தை பிரித்து தருமாறு மகாலிங்கத்திடம் பிரச்சனை செய்து வந்துள்ளார். இந்த சொத்து பிரச்சனைக்கு தீர்வு காணும் நோக்கத்தில் பாண்டியராஜன் மகள் பிரியாவுக்கும், மகாலிங்கம் மகன் அழகுவிஜய்க்கும் திருமணம் செய்து வைத்துள்ளனர். ஆனால், தம்பதிகளிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து வாழ்கின்றனர்.
இந்த சூழலில் மீண்டும் கடந்த 2024 மார்ச்சில் சொத்து பங்கீடு தொடர்பாக பிரச்சனை ஏற்பட்டு பாண்டியராஜன் அளித்த புகாரில் மகாலிங்கம் கைது செய்யப்பட்டார். மகாலிங்கம் சிறையிலிருந்து வெளியே வந்தவுடன் அவரை கொலை செய்ய பாண்டியராஜன், பாலமுருகன் திட்டமிட்டுள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், முன்கூட்டியே பாலமுருகனை கொலை செய்ய மகாலிங்கமும் அவரது மகன் அழகு விஜயும் திட்டமிட்டனர். அதன்படி மகாலிங்கத்திடம் லோடுமேன்களாக வேலை பார்த்து வந்த பொதும்பு பென்னி (19), வில்லாபுரம் பரத் (18), சுப்பிரமணியபுரம் கோகுலகண்ணன் (18) மற்றும் நாக இருள்வேல் (17) ஆகிய நால்வரும் கொலை செய்தனர். குற்றவாளிகள் நால்வரையும் கைது செய்த தனிப்படையினர், கொலைக்கு திட்டமிட்ட மகாலிங்கம் மற்றும் அழகுவிஜயை தேடி வருகின்றனர்.