சிதம்பரம் அருகே கடற்கரையில் கரை ஒதுங்கிய மர்மப்பொருள்- மீனவர்கள் அச்சம்

சிதம்பரம் அருகே கடற்கரையில் மிதவை போன்ற மர்மப்பொருள் ஒன்று ஒதுங்கியதால் மீனவர்கள் அச்சம். போலீசார், கடலோர காவல்படையினர் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
சிதம்பரம் அருகே உள்ள சாமியார்பேட்டை கடற்கரைக்கும் வேலங்கிராயன் பேட்டை கடற்கரைக்கும் இடையே மிதவை ஒன்று கடற்கரையில் இன்று கரை ஒதுங்கியது. இதைப்பார்த்த கிராம பொதுமக்கள் புதுச்சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் அங்கு சென்று பார்த்தபோது மஞ்சள் நிறத்தில் மாலத்தீவு என எழுதப்பட்ட மிகப்பெரிய மிதவை ஒன்று கரை ஒதுங்கி இருந்தது.
இதையடுத்து புதுச்சத்திரம் போலீசார் வருவாய் துறையினருக்கும், மீன்வளத்துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து இந்த மிதவை குறித்து விசாரணை நடத்தினர். பின்னர் கடலோர காவல் படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையில் கடலோர காவல்படை போலீசாரும் சாமியார்பேட்டை கிராமத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். கரை ஒதுங்கிய மிதவை கடலில் கப்பலில் பயன்படுத்தப்படும் போயா என்று அழைக்கப்படும் மிதவை என முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. கடலில் ஏற்பட்ட காற்றின் வேகம் மற்றும் அலை காரணமாக இந்த மிதவை கரை ஒதுங்கி இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.