மயிலாப்பூர் தவெக வேட்பாளருக்கு சிக்கல்! "என் குழந்தையை கடத்தி வைத்திருக்கிறார்" - மனைவி கதறல்..!

 
1

தமிழகத்தில் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன. நடிகர் விஜய் புதிதாக தொடங்கிய தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியும் முதல் தேர்தலை சந்திக்க இருப்பதால், இந்த தேர்தல் எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது.

இந்தச் சூழலில், தவெக மாநில பொருளாளரும், மயிலாப்பூர் தொகுதி வேட்பாளருமான வெங்கட்ரமணன் மீது, அவரைப் பிரிந்து வாழும் மனைவி மீனாட்சி, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அவர் அளித்த புகாரில், "எனக்கும் சென்னை பம்மல் பகுதியைச் சேர்ந்த பந்தாமன் மகன் வெங்கட்ரமணனுக்கும் கடந்த 2012-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. அதன் பின்னர் 2016ஆம் ஆண்டு யோகவர்ஷினி என்ற பெண் குழந்தை பிறந்தது. பின்னர், கருத்து வேறுபாடு காரணமாக எங்கள் இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தோம். வெங்கட்ரமணன், சென்னை குடும்ப நல நீதிமன்றத்தை நாடியபோது, நீதிமன்றம் எங்கள் இருவரையும் சேர்ந்து வாழும்படி உத்தரவு பிறப்பித்தது.

தற்சமயம், என் கணவர் என்னுடன் வாழாமல் எனது 9 வயது குழந்தையை என்னிடம் இருந்து வலுக்கட்டாயமாக எடுத்துச் சென்றுவிட்டார்.

என் கணவர் வெங்கட்ரமணன், தமிழக வெற்றிக் கழகத்தில் மாநில பொருளாளராக இருக்கிறார். அவர் தற்போது, மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிடுகிறார்.

அவர், என் குழந்தையுடன் பம்மல் பகுதியில் உள்ள அவரது வீட்டில் உள்ளார். குழந்தையை என்னிடம் ஒப்படைக்காமல் மிரட்டி வருகிறார். என் குழந்தையை என் கண்ணில் காட்டாமல், அவருடைய பாதுகாப்பில் அடைத்து வைத்துள்ளார். எனவே, கணவரிடம் இருந்து என் குழந்தையை காவல் துறையினர் மீட்டுத் தர வேண்டும்' என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக செய்தியாளர்களிடம் மீனாட்சி கூறுகையில், "எனது குழந்தையை தரும்படி என் கணவரிடம் தொடர்ந்து கேட்டு வந்தேன். காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. என் மகளைப் பார்க்க வேண்டும் என போனில் அழைத்தால் உரிய பதிலளிப்பதில்லை. தொடர்ந்து எனக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வெங்கட்ரமணன் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். வெங்கட்ரமணனிடம் இருந்து என் குழந்தையை மீட்டுத் தர வேண்டும்" என்று தெரிவித்தார்.