மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி - 27 வங்கிக் கணக்குகள் முடக்கம்.. 8 கட்டடங்களுக்கு சீல்..

 
தேவநாதன் யாதவுக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல்

மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி வழக்கில் கைதாகியுள்ள தேவநாதனின் வங்கிக்கணக்குகள் உள்பட மேலும் 27 வங்கிக்கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. மேலும் அவர் தொடர்புடைய  8 கட்டிடங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.  

சென்னை மயிலாப்பூரில் 150 ஆண்டுகளாக  செயல்பட்டு வந்த தி மயிலாப்பூர் இந்து பெர்மனெட் ஃபண்ட் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த  முதலீட்டாளர்களிடம் 525 கோடி ரூபாய் பெற்று மோசடி செய்ததாக அந்நிதி நிறுவனத்தின் இயக்குனர் தேவநாதன் யாதவ் உள்பட 3 பேரை பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்தனர். நிதி நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தேவநாதன் யாதவ் உள்ளிட்ட 3 பேரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில்  இருந்து வருகின்றனர்.  தேவநாதன்  மீது  300க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளதாக பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து தேவநாதனின் 5 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன.  

மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி - 27 வங்கிக் கணக்குகள் முடக்கம்.. 8 கட்டடங்களுக்கு சீல்..  

இந்த நிலையில் தற்போது இன்று மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி விவகாரம் தொடர்பாக மொத்தம் 27 வங்கிக் கணக்குகளை முடக்கியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.  தேவநாதனின் 5 வங்கிக் கணக்குகள் மற்றும் நிதி நிறுவனத்தின் 18  வங்கி கணக்குகள், குணசீலன் மற்றும் மகிமைநாதனின் தலா 2 வங்கிக் கணக்குகள் என மொத்தம் 27 வங்கி கணக்குகளை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முடக்கியுள்ளனர். 

மேலும், ஏற்கனவே   நிதி நிறுவன மோசடி வழக்கு தொடர்பாக தேவநாதன் வீடு உள்பட 10க்கும் மேற்பட்ட இடங்களில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டனர். இதில், ₹4 லட்சம் பணம், 2 கார்கள், ஹார்டு டிஸ்க்குகள், முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளன. தொடர்ந்து, நிதி நிறுவனம், தேவநாதனின் தனியார் தொலைக்காட்சி (WIN TV) நிறுவனத்திற்கு போலீசார் சீல் வைத்தனர். 

மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி - 27 வங்கிக் கணக்குகள் முடக்கம்.. 8 கட்டடங்களுக்கு சீல்..  

தற்போது அடையாறு, வண்ணாரப்பேட்டை ,சைதாப்பேட்டை, பெரம்பூர் ஆகிய இடங்களில் வாடகை கட்டிடத்தில் இயங்கி வந்த நிதி நிறுவன கிளை அலுவலகங்களுக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது.  மயிலாப்பூர் நிதி நிறுவனத்திற்கு சொந்தமான மூன்று இடங்கள் மற்றும் தேவநாதனுக்கு சொந்தமான ஒரு இடம் என இதுவரை மொத்தம் 8 கட்டிடங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.