என் முதல் கையெழுத்தே அதற்குத்தான் - அமைச்சர் ராஜ்மோகன் ஓபன் டாக்..!

 
1

சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள அரசு உதவிபெறும் நடுநிலைப் பள்ளியில் 2026-27 ஆம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் துவக்கி வைத்தார். மேலும், புதிதாக பள்ளியில் சேர்ந்த மாணவர்களுக்கு பாட புத்தகம், நோட்டு புத்தகம், புத்தகப்பை, சீருடை மற்றும் வண்ண பென்சில்கள் உள்ளிட்டவற்றை அவர் வழங்கினார்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "2026-27ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை துவக்கி வைக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில் 4 லட்சம் மாணவர்களை சேர்க்க வேண்டும் என்ற இலக்கை வைத்து பயணித்து வருகின்றோம். கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் என்ற இலக்கை ஏற்கெனவே தாண்டிவிட்டோம். இதுவரை 1,52,625 மாணவர்கள் அரசுப் பள்ளியில் சேர்ந்துள்ளனர்.

இனிவரும் காலங்களில் இந்த இலக்கை நோக்கி பயணிப்போம். தனியார் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கையும், அரசு பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கையும் சமமாகவே உள்ளது. அரசு பள்ளிகளை காட்டிலும் தனியார் பள்ளிகளில் கூடுதலாக மாணவர் சேர்க்கை என்பது கிடையாது.

அனைத்து பள்ளிகளிலும் பூட்டப்பட்ட கழிப்பறை வசதி, குடிநீர் வசதி மற்றும் வகுப்பறைகள் அமைப்பது தொடர்பாகவே எனது முதல் கையெழுத்தை போட்டேன். அனைத்து பள்ளிகளும் தரமாக இருக்க வேண்டும் என்பதை உறுதி செய்து வருகிறோம். பள்ளிக்கல்வித் துறையில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் அனைத்தும் வரையறுக்கப்பட்டுள்ள பயனாளிகள் அனைவருக்கும் 100 சதவீதம் சென்றடைய வேண்டும் என்பதை கண்காணித்து வருகிறோம்" என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், "தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கை என்பது இந்த மண்ணுக்கானது, எங்கள் மாணவர்களுக்கானது. இது எங்கள் டிஎன்ஏவிலேயே (DNA) உள்ளது. இதில் ஆங்கில வழி கற்றலில் குறைபாடு உள்ள மாணவர்களுக்கு கற்றல் திறனை அதிகப்படுத்த பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அரசு உதவி பெறும் பள்ளிகளில், தேவைகள் இருக்கும்பட்சத்தில் அதை மனுவாக அளித்தால் உடனடியாக சரி செய்து தரப்படும். மாநிலத்தின் நலன் தான் முக்கியம். மாநிலத்தின் நலனை முன்னிறுத்தி முதலமைச்சர் விஜய், பிரதமர் மோடியை சந்தித்துள்ளார். ஓராசிரியர் பள்ளிகள் அடையாளம் காணப்பட்டு, அதிலுள்ள நிதி, சமூகம் மற்றும் நிர்வாக ரீதியான பிரச்சனைகள் உள்ளிட்டவை அடையாளம் காணப்பட்டு, அவற்றை சரி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மாணவர்களின் பிரச்சனைகளுக்கு உதவும் வகையிலான இலவச அலைபேசி எண்கள் புத்தகங்களில் வழங்கப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு பாலியல் தொல்லை போன்றவை ஏற்பட்டால், புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ள அலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். அதன் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அமைச்சர் ராஜ்மோகன் கூறினார்.